Main Menu

“எழுந்த பேரலையில் தவித்த உயிர்கள்” (சுனாமி நாளுக்கான சிறப்புக்கவி)

ஆழிப் பேரலைகள் தந்த அனர்த்தங்கள்
ஆயுள் உள்ளவரை அழியாத சுவடுகள்
ஆண்டுகள் பதினைந்து ஓடியே போனாலும்
ஆழ் மனதின் ஓரமாய்
மாண்ட உறவுகளின் எதிரொலி
மீண்டும் மீண்டுமாய் கேட்குதே !

கண் இமைக்கும் நேரத்தில்
கடிதெனவே எழுந்த பேரலைகள்
ஊர்மனை புகுந்து
உயிர்களை வாரிச் சுருட்டி
இழுத்துச் சென்றதுவே !

அடித்துச் செல்லப்பட்ட தருணங்கள்
பேரலையில் தவித்த உயிர்கள்
தத்தளித்த காட்சிகள்
துயரத்தின் அடையாளம்
கறை படிந்த அத்தியாயம்
கண் முன்னே நிழலாடுதே இன்னும் !

அகோரப் பசியைத் தீர்க்க
கோரத் தாண்டவமாடி
குஞ்சுகளையும் பிஞ்சுகளையும்
இரை ஆக்கியதே
ஆழிப் பேரலைகளின் சீற்றம்
அப்பாவி உயிர்களைப் பறித்ததே !

மண் மடியில் தவழ்ந்தவர்களையும்
தோளில் சாய்ந்தவர்களையும்
காலாற நடந்தவர்களையும்
நொடிப் பொழுதில் இழுத்துச் சென்று
உயிர்களைக் குடித்து
ஏப்பம் விட்டதே ஆழிப் பேரலைகள் !

தாங்கிப் பிடிப்பதற்கு கூட
கொழு கொம்பு ஏதுமின்றி
பேரலையில் தவித்த உறவுகளின் ஓலங்கள்
இன்றும் கேட்கிறதே எதிரொலியாய்
இனியும் இந்த அனர்த்தம் வேண்டாமே
எஞ்சியுள்ள உறவுகளுக்கு
இருகரமும் கொடுத்திடுவோம்
வாழ வழி காட்டிடுவோம் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 26.12.2019

பகிரவும்...