Main Menu

“உலக தாய்மொழி தினத்திற்கான சிறப்புக்கவி”

உலக மொழிகள் அனைத்தும்
உன்னதம் பெற வேண்டி
உலக தாய்மொழி தினத்தை
உலகிற்கு வகுத்து தந்ததே ஐ.நா..வும்
மாசித் திங்கள் இருபத்தியொன்றை
அவரவர்களின் தாய்மொழியை
கொண்டாடி மகிழ !

இனிமை நிறைந்த இன்பத்தமிழை
இளமை மாறாத் தொன்மைத் தமிழை
வனப்பு மிக்க அழகியல் தமிழை
சிறப்பு மிக்க செந்தமிழை
போற்றிப் பாட ஓர் தினம்
தாய் மொழிக்கான சுபதினம் !

கருத்துப் பரிமாற்றங்களை தூண்டி
கலாச்சாரங்களைத் தாங்கி
பண்பாட்டு விழுமியங்களைக் காத்து
எம் இனத்தின் முகவரியாய்
எமக்கு அடையாளமாய்
எடுத்துக் காட்டாய் இருக்கும்
எம் தாய்மொழிக்கு இன்று சுபதினமாம் !

உள்ளத்து உணர்வுகளை
உணர்வின் அனுபவங்களை
உரிமையோடு பகிர்ந்திட
உலகைப் புரிந்திட
ஒப்பற்ற மொழியாகி
விழியாகி ஒளி தந்த
எம் தாய்மொழிக்கு இன்று சுபதினமாம் !

தாய் தந்தை வழிவந்து
தாய் போல எமைக் காத்து
தாலாட்டி மகிழ்வித்து
தெய்வ மொழியென பெயராகி
உறவுப் பாலமாய் வலம்வந்து
உலக மொழிக்கெல்லாம் தாயாகிய
உன்னத தாய்மொழியே
உனக்கு இன்று சுபதினமாம் !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 21.02.2020

பகிரவும்...