Main Menu

“ ஈழத்தின் இலக்கியச் செம்மல் “ (செங்கை ஆழியான் நினைவுக்கவி )

ஈழத்து இலக்கியப் பரப்பை
இலக்கியப் படையல்களால் அலங்கரித்து
நாவல் சிறுகதை கவிதை கட்டுரை
பாடநூல்கள் வரலாற்று நூல்களென
ஏராளமாய் எழுதிக் குவித்து
இலக்கியப் உலகில் வலம் வந்தாரே
இலக்கியச் செம்மல் செங்கை ஆழியான் !

கை சிவக்க சிவக்க எழுதி
செங்கை ஆழியான் என
மங்காப் பெயரைச் சூடி
கல்வியிலும் இலக்கியத்திலும்
கலையுலகிலும் அரச பணிகளிலும்
கணக்கற்ற சாதனைகளைச் செய்து
பயணித்தாரே பல பணிகளோடு !

ஈழத்து இலக்கியத்தின் காவியனாய்
ஈழத்து சிறுகதையின் ஆசானாய்
தமிழர் வரலாற்றின் தடமாய்
தமிழர்களின் பண்பாட்டை
கலாச்சாரத்தை வரலாற்றை
காலக் கண்ணாடியாக்கி
கண்முன்னே படையல்களாக்கினாரே !

காட்டாற்று வெள்ளமென
ஊற்றாகப் பெருகியதே படையல்கள்
காட்டாறு எனும் நாவல்
சாகித்திய விருதும் பெற்று
வாடைக்காற்று எனும் நாவல்
ஈழத்து திரைவானில் திரைப்படமாகி
வெற்றியைக் கொடுத்ததே !

அரை நூற்றாண்டிற்கும் மேலாக
இலக்கியப் பணிகளோடு பயணித்து
மாசித் திங்கள் இருபத்தியெட்டிலே
மண்ணுலகை விட்டு ஏகினாரே
ஈழத்தின் இலக்கியச் செம்மல்
எம் புவியியல் ஆசான் செங்கை ஆழியான் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 28.02.2020

பகிரவும்...