Main Menu

“அறிவாலயம் அனலானதே” (01/06/2020)

தமிழரின் நிலையான சொத்து
தலைமுறை தலைமுறையாய்
தடங்கள் பல பதித்து
அறிஞர் பெருமக்களையும்
ஆசான்களையும் உருவாக்கி
அறிவுப்பசி தீர்த்த அறிவாலயம்
ஆசியாவின் மிகப்பெரிய அறிவுச் சுரங்கம்
யாழ் குடாநாட்டின் அறிவுப் பொக்கிஷம்
அனலுக்குள் பொசுங்கியதே
ஆனித் திங்கள் ஒன்றிலே !

முப்பத்தி மூன்றிலே கட்டப் பட்டு
தொண்ணூற்றி ஏழாயிரம் நூல்களைக் கொண்ட
தமிழரின் அறிவாலயத்தை ஆதாரசுருதியை
அனலுக்குள் பொசுங்க வைத்தனரே
ஆனித் திங்கள் ஒன்றிலே
ஆண்டுகள் முப்பத்தியொன்பதும் கடந்ததே
ஆனாலும் ஆறவில்லையே காயங்கள்
நீறாக்கிப் போட்டனரே நீசர்கள் !

அரிய பலநூல்கள் ஆராட்சிக் கட்டுரைகள்
பத்திரிகைத் துணுக்குகள் ஏட்டுச்சுவடிகள்
பண்டைய பழந்தமிழர் நூல்கள் என
தேடற்கரிய தேட்டங்களை எல்லாம்
சாம்பல் மேடாக்கினாரே அறிவிலிகள்
அறிவுப் படுகொலை செய்து
வேடிக்கை பார்த்து கேளிக்கை செய்தனரே
தமிழரின் அறிவாலயமும் அனலானதே !

எரிந்து போன சாம்பல் மேட்டின்
நினைவலைகள் இன்றும்
அலை மோதுகின்றதே
அனலுக்குள் பொசுங்கியும்
பீனிக்ஸ் பறவை போல் மீண்டும்
பிரமாண்டமாய் அதேயிடத்தில்
பிரமாதமாய் காட்சி தருகிறதே
யாழ் மண்ணின் நடுவினிலே இன்று !

அறிவுக் கண்ணைத் திறந்து
அறிவாலயமாய் மிளிர்ந்து
அறிவின் தேவையை
அள்ளியே கொடுக்குது
தேவதை போலவே
சேவையை வழங்குது
யாழ் பொதுசன நூலகம் மீண்டும்
அதே இடத்தில் இன்றும் !

கவியாக்கம்……….ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...