Main Menu

அப்துல் கலாம் – புன்னகை விருட்சம்

பூமிப் பந்தில்
ஒரு பூப்பந்து
புன்னகை விருட்சம்..

அக்கினிச் சிறகில்
அலர்ந்த அரும்பு
ஆகாய வியப்பு..

அறிவிய லறிவின்
உலகச் சூரியன்
அமைதி நிலா..

எளிமைப் பதிவின்
முதல் அகராதி
இதய சாரதி..

கனவு அணுவின்
நினைவுத்துகள்
அனுபவ சக்தி..

இராமேசுவரத் தீவின்
இந்திய தேவன்
தேசமான(ண)வர்..

உலக நாடுகளின்
உயிரியக்கி
அமைதிப் புறா..

எதிரிகளில்லா
கதிரியக்கம்
இசைப்பிரியர்..

ஓய்வே இல்லா
இயற்கைக்கோள்
உயர்வுக்கலம்..

எவரையும் ஏவார்
ஏவியதொன்றே
ஏவுகணை..

எவரும் அணுகலாம்
எண்ணு முன்னிவர்
அருகிலாம்..

‘நான்’ என்பதைச்
சிறிதும் விரும்பா
‘நானோ’ விளம்பி..

அரசுக் காசில்
செலவு எழுதா
அரச வரவு.

முடியில் பணிவு
முதலில் வைத்த
இதயத் துணிவு..

புத்தக நூலகம்
எழுத்து வரிகளில்
வாழ்க்கைத் தறி..

நாம் படிக்கும்
‘நம்பிக்கை’ ஏணியின்
முதல் படி..

வாசிக்கச் சொல்லி
யோசிக்க வைத்த
முதல் வாசி

சுவாசிக்க வைத்த
எமது ஆசான்….நின்
சுவாசம் எங்கே…

தேசக் கொடிக்கு
வண்ணமுண்டு
உங்களுக்கில்லை..

அக்கினிச் சிறகு
அணைக்க மறுக்க…நீ
பிறந்த மண்ணில்..

இருபது இருபதில்
எழுந்து வருக
இமயம் உருக…
………………..
அஞ்சலி :
அன்பு மாணவன்
விஜயகிருஷ்ணன்

பகிரவும்...