Main Menu

வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் வைகாசிப்பொங்கல் விழா!

முல்லைத்தீவு வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப்பொங்கல் விழா! (சிறப்புக்கவிதை)

-நீ(தி)தீ-

என்ன
குறை வைத்தோம்
உன்னில்,
ஏது குறை சொன்னோம்.
பல பண்பாட்டுத்திருவிழாக்களை
ஆடிக்களித்திருந்த
ஊர்களில் இருந்தல்லவா
காவடிகள் தூக்கி வந்தோம்.
தீச்சட்டி ஏந்தி வந்தோம்.
பால்குடம் எடுத்து வந்தோம்.

எப்படித்தகும்?
கிரக பலன்கள் அவர்க்கும்
கிரக பாவங்கள் நமக்கும்.
தோஷங்கள் நமக்கும்
பரிகாரங்கள் அவர்க்கும்.
நீதி கேட்டு
மதுரை மாநகரை எரித்த
சோழ நாட்டாளே,
எதை எரித்து
நீதி கேட்பாள்
ஈழ நாட்டாள்?
உனைப்போல முடியாதம்மா.
எரிப்பதற்கு
உனக்காவது
மதுரை மாநகர் இருந்தது
நாடே இல்லா
ஏதிழையாள்
என் ஈழ நாட்டாள்.

யுத்தம் சுடுகாடு ஆக்கிய
ஊர்களுக்குள் நின்று கொண்டு
நீதி கேட்கிறாள்.
யுத்தம் சப்பித்துப்பிய
மனிதர்களுக்குள்
இருந்து கொண்டு
நீதி கேட்கிறாள்.
மரண ஓலமும் பிணவாடையும்
சுமந்து வரும் காற்றை
சுவாசித்தவாறு
நீதி கேட்கிறாள்.
அம்மா! தாயே! என
வாயெடுத்துப்பாடிய
அதே வாய்கள்தானே
அன்றும்,
ஐயோ! அம்மா! என
ஓலமிட்டன.
என் தாயே! ஏன் தாயே!
நீ இரங்கி வரவில்லையே.
ஆயிரம் கண்ணுடையாளே
உந்தன் ஒற்றைக்கண் கூட
திறக்கவில்லையே.

பனிச்சங்காயில் படை
விரட்டியவளே!
கந்தகவெடி அதிர்வில்
எங்கள் தாய்க்குலத்துக்கு
மடி கிழிந்து
குறைப்பிரசவம் நிகழ்ந்தபோது,
உந்தன் பனிச்சங்காய்களில்
ஒன்றுதானும் அவர்க்கு
சிராய்ப்புக்காயமேனும்
கொடுக்கவில்லையே.
களப்புக்குள்
எம் ஆடை களைந்து
கலங்கப்படுத்தி
கலவரப்படுத்தியபோது
ஒட்டுத்துணி கூடத்தந்து
நம் மானம் காக்கவில்லையே.
உப்பு நீரில் விளக்கெரியும்
அதிசயம் காட்டியவளே!
சுற்றி வளைத்து
வேலி கட்டி அடிக்கும்போது,
உப்புச்சப்பில்லாமல்
இருந்து விட்டாயே.

“ஓயாத அலைகள்”
தொடர் வெற்றிக்கான ஆசி
உன்னிடமிருந்தல்லவா
பெறப்பட்டது.
நான்கு வானோடிகளின் பறப்பில்
நாற்பது இலட்சம் தமிழனும்
உச்சிக்கிரங்கிக்கிடைக்கையில்,
தலைக்கு மேலே எழுந்தவர்
தலைக்கணமே இல்லாது
உன்னிடம் பணிந்து
விடைபெற்றுத்தானே போயினர்.
உந்தன் கோபுரகலசத்துக்கு
பூத்தூவும் பறப்புதானே
வான்படை கண்ட
முதல் தமிழனின் முதல் பறப்பு!
உலகுக்கு
முத்தாய்ப்பாய் முதல் செய்தி!
ஏன் தாயே?
எமைக்கைவிட்டு விட்டாய்.
ஏன் தாயே?
எமைக்கைதுசெய்ய விட்டாய்.

உண்மைக்குள் வாழ்தல்
எத்தினை அர்த்தம்.
வாழ்ந்துதான் பார்த்தல்
எத்தினை அழகு.
எதிரும் புதிருமான
மௌனத்தை ஏன் தாயே
எங்கும் பரப்பிக்கிடக்கிறாய்.
சென்.பீட்டர் தொடங்கி
செஞ்சோலை, மடு,
ஐயன்கண்குளம்,
முள்ளிவாய்க்கால் என நீளும்
எங்கள்
வண்ணத்துப்பூச்சிகளின்
இறக்கைகள் ஒடிக்கப்பட்டதும்,
அவற்றின்
பல வண்ணக்கனவுகளுக்கு
புலிச்சாயம் பூசப்பட்டதும்
நெஞ்சுக்கு நீதியா?

தேரோடும் வீதியில்
கொலு இருந்தவர்க்கே
கொள்ளி வைத்தார்
புத்தரின் பெயரால்,
போர்தான் வாழ்வென்று
வந்தெம் உறவுகளைத்தின்று
ஏப்பமிட்டவர்கள்.
நெஞ்சில் ஆயிரம்
தீயை வைத்தார்.
நடுநிசி நித்திரையை
மாற்றி வைத்தார்.
கண் கலங்க கதி கலங்க
ஊரெல்லாம் மரண ஓலம்
கேட்க வைத்தார்.
இந்தக்கருமமெல்லாம்
யார் தலைக்கு?
எல்லாம்… எல்லாமே…

வரலாறு மாறும்!
வண்டியும் ஓடத்தில்
ஏறும் என்று எதுவரை
சொல்லிக்கொண்டிருப்பேன்.
தருமத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும் தருமம்
மறுபடியும் வெல்லும் என்று
எதுவரை நம்பிக்கொண்டிருப்பேன்.
இன்று போய் நாளைவரும்.
நெஞ்சறைக்கூட்டுக்குள்
அப்பழுக்கில்லாமல்
அப்படியே
அப்பிப்போய்க்கிடக்கிற
சோகங்களோடு,
பழுதில்லா உணர்வுகளோடு,
நாளை நானும் வருவேன்
நீதி கேட்டு.
நீ தீயாகச்சுடும் வரை…
***
முல்லைத்தீவிலிருந்து…
தாயக கவிஞர் -அ.ஈழம் சேகுவேரா-

பகிரவும்...
0Shares