தாயே!, உனக்கு நான் தாயாக.., அன்னையர் தின சிறப்பு கவிதை..
அம்புலி காட்டி, இன்னமுதூட்டி
என்பசி தீர்த்தாயே..!
அல்லும், பகலும் ஈயெறும்போட்டி
இன்னுயிர் காத்தாயே..!
தாயே..!தாயே..! என் தாயே..!
ஈரைந்து திங்கள்
என்னை சுமந்தாயே..!
உன்னை நிகர்த்த கோயில் இல்லை
உன்னை விஞ்சிய தெய்வமும் இல்லை-உன்
மதிமுகம் தரும் இதம், மலர்மடி தரும் சுகம்
சொர்க்கம் கூட தருவதில்லை.
உன் மணி வயிற்றில் கருவாக
நான் சூல் கொண்ட வேளையில்
நீ அடைந்த பூரிப்பும்..
பனிக்குடம் நீங்கி நான்
கண் விழித்த பொழுதினில்
நீ அடைந்த வேதனையும்..
உன் கருவறையின் கதகதப்பில்
இன்புற்றிருந்த என்னையன்றி
சரியாக உவமிக்கத் தக்க நபர்..
இவ்வுலகினில் வேறாருண்டு?
மாசற்ற வாஞ்சையுடன்
மார்போடு எனையணைத்து,
நீ அளித்த ஒவ்வொரு துளி
தாய்ப்பாலுக்கும் ஈடு செய்ய
எனக்கு ஓர் பிறவி மட்டும் போதாது..
மீண்டும் ஒரு பிறவி எடுத்து
உனக்கு அன்னையாகி தொண்டு செய்யும்
அரிய வரத்தை அளித்திடுமாறு
தாயே..,தாயே.., உன்னிடத்தன்றி
வேறு யாரிடம் நான் வேண்டி நிற்க..?
-கவிஞர் உமர் இளவல்
பகிரவும்...