Main Menu

300 பேர் கொல்லப்பட்ட சம்பவம் எப்படி கவனம் ஈர்க்காமலே போனது?

ஜேர்மன் மருத்துவமனை ஒன்றில் 300 நோயாளிகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஒரு நர்சின் வழக்கில் பல கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கவும் இல்லை, பல கேள்விகள் எழுப்பப்படவும் இல்லை என்ற உண்மை வெளியாகியுள்ளது.

Delmenhorst மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு Niels Högel என்ற அந்த நர்ஸ் வேலைக்கு வந்தபோது, அவர் கொண்டு வந்த சிபாரிசு கடிதத்தில், அவர் தனியாக எத்தகைய சூழலையும் கையாளும் மனசாட்சியுடைய பணியாளர் என்று எழுதப்பட்டிருந்தது.

அவரது கண்காணிப்பில் இருந்த பல நோயாளிகள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்ததைக் குறித்தோ, அவர் தனது நோயாளிகளை தொடர்பு கொள்வதற்கு தடை விதித்து மருத்துவமனையை விட்டு வெளியேற்றப்பட்டதையோ அந்த கடிதம் கூறவில்லை.

ஆனால் Delmenhorst மருத்துவமனையில் அவர் வேலைக்கு சேர்ந்த நான்கே மாதங்களில் பலர் தொடர்ந்து உயிரிழக்கவே, Högel மீது சந்தேகம் உருவாகியது.

இன்று ஜேர்மனியின், சொல்லப்போனால் உலகின் மிக மோசமான சீரியல் கில்லர், Högel என்பது தெரியவந்துள்ளது.

2000 முதல் ஐந்தே ஆண்டுகளில் Högel 300க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

300 பேர் கொல்லப்பட்ட சம்பவம் எப்படி கவனம் ஈர்க்காமலே போனது என்று கேள்வி எழுப்புவோரில், Högel கையால் உயிரிழந்த ஒருவரின் பேரனான Christian Marbachம் ஒருவர்.

Högel உடன் வேலை செய்தவர்களில், அவருக்கு எதிராக சாட்சி சொல்ல வந்த ஒரே சக ஊழியரான Frank Lauxtermann, ஒரு தவறு நடக்கும்போது, அதை கண்டும் காணாமல் இருப்பது, வேறெங்கோ பார்ப்பது போல் இருந்து விடும் கலாச்சாரம் ஆகியவையே குற்றவாளியை பாதுகாத்ததாக தெரிவிக்கிறார்.

இரண்டு நோயாளிகளை கொலை செய்தது மற்றும் நான்கு நோயாளிகளை கொல்வதில் பங்கு ஆகிய குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருக்கும் Högel மீது தற்போது மூன்றாவது முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்முறை, 100 பேருக்கும் அதிகமான நோயாளிகளை கொலை செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றங்களை மூடி மறைப்பதற்காக பொய் சொல்லியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் Högelஇன் சகப்பணியாளர்கள் எட்டு பேர் மீது மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

கவனக்குறைவாக இருந்த மருத்துவமனை அதிகாரிகள் மீதும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Delmenhorst மருத்துவமனையில் பணியாற்றிய இரண்டு மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Högelஉடன் பணியாற்றிய ஊழியர்கள் பலர், உயிருக்கு போராடும் நோயாளிகளைக் காப்பாற்றுபவர் என மிக குறுகிய காலகட்டத்தில் Högel பெயர் எடுத்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் நடந்த உண்மை என்னவென்றால், அம்மாதிரியான சூழலை உருவாக்குவதே Högelதான். அதாவது மாரடைப்பை ஏற்படுத்தும் வகையில் மருந்துகளை ஓவர் டோஸாக நோயாளிகளுக்கு ஊசி மூலம் ஏற்றி விடுவது Högelஇன் வழக்கம்.

பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட, நோயாளி இறக்கும் நிலைக்கு சென்று விடுவார், அல்லது இறந்து விடுவார்.

உடனே அங்கு ஹீரோ போல வரும் Högel, இதய மஸாஜ் கொடுத்து அந்த நோயாளியை காப்பாற்றி விடுவார்.

இதனால் அவரது சக ஊழியர்கள் Högelஐ உயிர் மீட்கும் ஹீரோ என்றே அழைத்து, பரிசுகள் எல்லாம் வழங்கியிருக்கிறார்கள்.

ஆனால் சிலர் காப்பாற்றப்பட்டது உண்மைதான் என்றாலும் பலர் உயிரிழந்திருக்கிறார்கள், ஒருவர் இருவர் அல்ல, நூற்றுக்கணக்கானோர்!

ஒருமுறை ஒரு நோயாளி இறந்தபோது, அவர் அருகே அவருக்கு சம்பந்தமே இல்லாத ஊசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சந்தேகத்தின்பேரில் நர்ஸ் ஒருவர் எடுத்த நடவடிக்கையின் முடிவில் Högel சிக்கினார்.

இறந்த பல நோயாளிகளின் குடும்பத்தார் அழுத்தம் கொடுத்த பிறகே விசாரணை தொடங்கப்பட்டு தற்போது 100 பேரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படும் அளவுக்கு வந்துள்ளது.

தனது கணவரை சாகக் கொடுத்த Mariya Tüter, ஒரு காலத்தில் மருத்துவர்களை சரியானதை செய்வோராக, நம்பத்தகுந்தவர்களாக பார்த்தேன், இந்த வழக்கை பார்க்கும்போது, அந்த நம்பிக்கை எல்லாம் காற்றில் போய் விட்டது, எப்படியோ நீதி நிலை நாட்டப்பட்டால் போதும் என்கிறார்.

பகிரவும்...