Main Menu

வழமைக்குத் திரும்புகிறது ஜேர்மனி – கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அனுமதி

கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் தொற்றின் தீவிரம் குறைவடைந்து வரும் நிலையில் பகுதியளவில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய சிறிய கடைகள், கார் மற்றும் துவிச்சக்கர வண்டி விற்பனை நிலையங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் ஒரு மாத காலமாக முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இருந்தும், சமூக இடைவெளியைப் பேணுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல, வீட்டை விட்டு வெளியேறும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதும் அங்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் கொரோனா தொற்றாளர்களின் இறப்பு வீதமானது, அயல் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைந்த அளவாகவே இருக்கின்றது. வினைத்திறனான வைத்திய சேவை மற்றும் மிகப்பரந்த அளவிலான தொற்றுப் பரிசோதனைகள் மூலமே இது சாத்தியப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

அங்கு இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 65 பேர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 1323 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 220 பேர் நேற்று மரணித்துள்ளதுடன், மொத்த பலி எண்ணிக்கை 4862 ஆக உயர்ந்துள்ளது.

பகிரவும்...