Main Menu

இத்தாலியில் நோய்த்தொற்று குறைவடைவது நல்ல சமிக்ஞை என்கிறது அரசு

இத்தாலியில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று (திங்கட்கிழமை) கணிசமாகக் குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அங்கு கொரோனா வைரஸ் பரவல் இனங்காணப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக அதிகரித்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் குறைவடைந்து வந்த போதும், நேற்று அது மிகக்குறைந்த எண்ணிக்கையைக் காட்டியதாக குறிப்பிடப்படுகிறது.

நேற்று ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 237 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இருந்த எண்ணிக்கையிலும் 20 குறைவாகும்.

இந்த எண்ணிக்கை மிகச் சொற்பமாக இருக்கின்ற போதும் நோய்த்தொற்று குறைவடைந்து வருவதற்கான நல்ல சமிக்ஞை என இத்தாலி அரசின் மக்கள் பாதுகாப்பு முகவரகத்தின் தலைமை அதிகாரி ஏஞ்சலோ பொர்ரேல்லி தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் நாடளாவிய முடக்கம் எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி வரை தொடர்கின்ற போதும், அங்கு மட்டுப்படுத்தப்பட்ட சில வணிக நடவடிக்கைகளைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், பொருட்கொள்வனவில் ஈடுபடும் மக்களை சமூக இடைவெளிகளையும், சுகாதார நடைமுறைகளையும் பேணுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, ஸ்பெனுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் உள்ளது இத்தாலி. அங்கு இதுவரை ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 228 பேர் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 24 ஆயிரத்து 114 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

நேற்று மட்டும் அங்கு 2 ஆயிரத்து 256 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 454 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...