Main Menu

“யாழ்ப்பாண இடப்பெயர்வு நாள்” 30.10.1995 – இன்றுடன் 21 வருடங்கள்

பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
போகும் இடம் அறியாமல் – இங்கு
சாகும் வயதினில் வேரும் நடக்குதே
தங்கும் இடம் தெரியாமல்.

கூடு கலைந்திட்ட குருவிகள் – இடம்
மாறி நடக்கின்ற அருவிகள்
ஒற்றை வரப்பினில் ஓடும் இவர்களின்
ஊரில் புகுந்தது ஆர்மி – ஒரு
குற்றம் செய்யாதவர் முற்றத்தி லாயிரம்
குண்டுகள் வீழுதே சாமி
சோகத்தின் கோடுகள் முகத்தில் – இங்கு
சொந்தங்கள் சேருமா நிலத்தில்?

கூடி மகிழ்ந்திட்ட கோயில் வயல்வெளி
யாவும் இவர் இழந்தாரே – நேற்றுப்
பாடி மகிழ்ந்திட்ட ஊரைத் துறந்துமே
போகும் திசை யறியாரே

நெஞ்சில் வழிவதோ துயரம் –வழி
நீளும் திசையிவர் பயணம்
தாயின் மடியினில் ஆசையுடன் தலை
சாய்த்து உறங்கிய நேரம் – வந்த
பேய்கள் கொளுத்திய தீயில் எரிந்தவர்
போகும் வழியெல்லாம் ஈரம்
மாடுகள் கூடவா அகதி ? – தமிழ்
மண்ணிலே ஏனிந்தச் சகதி ?

பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
போகும் இடம் அறியாமல் – இங்கு
சாகும் வயதினில் வேரும் நடக்குதே
தங்கும் இடம் தெரியாமல்

-புதுவை இரத்தினதுரை-

பகிரவும்...