Main Menu

மண்குளிரச் செய்த முகில்கள்

மாரிமழை யாகி நீர்தெளித்து ஆடி
மண்குளிரச் செய்த முகில்கள்.
மாதவங்கள் செய்த போதெமது பூமி
மடியிலுரு வான உயிர்கள்.
போரில்விளை யாடும் வேளையுடல் வீழ்ந்த
போதுமுயி ரான சிலைகள்.
பூங்குயில்கள் பாடும் ஈழமதை வாங்கப்
போயெரிந்து போன புலிகள்.

மாலைமணி ஆறு ஆகும்பொழு தாக
மாரிமழை கொஞ்சம் ஓயும்.
மாலைமலர் சாத்தித் தீபஒளி காட்டும்
வேளைவிழி ஆறு பாயும்.
சாலை, கடை யோடு, வீடுஎன யாவும்
சாமிதுயி லில்லம் கூடும்.
சாதிமத மென்று வேறுபட லின்றித்
தேவநிலை கொண்டு பாடும்.

வாரியெடுத் தும்மை வாசல்தனில் வைத்து
வாசமலர் தூவும் பொழுதில்
வந்தெமது கண்ணில் நின்றுதெரி கின்ற
வாறுவர வேண்டும் அருகில்.
தேரிலெழுந் தெங்கள் தீபஒளி காணத்
தேடிவர வேண்டும் உறவு.
தேசமெலா மின்று வீசும்குளிர் காற்றில்
சேர்ந்துஎழ வேண்டும் சிறகு.

– கவிஞர் புதுவை இரத்தினதுரை –

பகிரவும்...