Main Menu

நிலவுகள் தந்த கருமைகள்

நிலவுகள் தந்த கருமைகள்
தமிழரெமை  நிமிர்த்திய
கந்தக மேனிகள்
மனிதகுல ஈகத்தின் உச்சங்கள்
உயிர்வெடி சுமந்த
உத்தமர்கள்
எங்கள் உயிராயுதங்கள்
எம்மைக் காத்தவர் நீங்கள்
எமதன்னை தேசத்தின்
காதலர் நீங்கள்
காலப்பெருவெளியில்
கடவுளே அறியமுடியா
அற்புதம் நீங்கள்
வெளியில் தெரியா
விசித்திரம் நீங்கள்
பகையிடம் நாங்கள்
பணியாதிருக்க
பகை குகை புகுந்து
உமதுடல் சிதைத்தீர்கள்
ஊர் வாழ்த் தானே
ஊரறியாமல் வெடித்தீர்கள்
வெளிச்சம் தந்து
இருளாகிப் போனீரே!
உமக்கான நாளில் ஒளிதீபம்
ஒளிராது  ஒளியிழந்து
கிடக்குறதென் தேசம்.

சம்பந்தர்களாலும்
சுமந்திரர்களாளும்
சலனப்பட்டுக் கிடக்கும்
நிலத்தில்
உங்கள் சந்தங்களைப்
பாடாதபடி
சபிக்கப்பட்டிருக்கிறேன்.
மாவைகளாளும்
மைத்திரிகளாளும்
மாவீரர்களே!
உங்களை மறந்திருக்கிற
மாயைக்குள்
கட்டப்பட்டிருக்கிறேன்.
கருமை தொலைத்த
வெறுமைகளாய்
விடுதலையிழந்து
விமோசனமற்றுக் கிடக்கிறது
என் தாய்நிலம்.

எது என் தேவையோ
அதைத்  துறக்கவும்
ஏகாதிபத்திய
எகத்தாளங்களை
ஏற்றுக்கொள்ளவும்
எதிர்க்க இயலாமல்
அடங்கிப்போகவும்
அரச உயர்பதவிகளில்
திளைத்திருக்கவும்
திரவியம் தேட தேசம்
கடக்கவும்
வேசமிட்டு வாழ்வை நகர்த்தவும்
வேலியே பயிரை மேய்கையில்
கூரை பிய்த்துக் கொட்டும்
கனவில் மிதக்கவும்
கல்லரை மறைத்து-ஈழ
கனவை மறந்து  வெறுமைகளாய்
வாழக்கடிந்த படி
கடத்தல்களுக்கும் காணாமல்
போதல்களுக்குமிடையில்
நாளிழுத்துப்  போகிறதெம்மை.

சினிமாக்காரனுக்கு
பதாகை வைக்கும்
சந்ததி காண்கையில்
சீரழிந்து போகும்
கலாசாரம் காண்கையில்
கல்விக்கூடத்திலும்
காமக் கலவி காண்கையில்
எமக்காக நீங்கள் செத்ததெல்லாம்
வீண் என்று எண்ணவும் எழுதவும்
தோன்றுகிறது எனக்கு.
மன்னித்து விடுங்கள்!
மண்ணுக்காய் மக்களுக்காய்
எல்லாம் துறந்த நீங்கள்
இம் மாக்களைப் போல
எல்லாம் மறந்து வாழ்ந்திருந்தால்
என் அக்காளும் அண்ணாவும்
என்னுடன்  இருந்திருப்பீர்கள்
அல்லவா..?
-குவே-

பகிரவும்...