Main Menu

“தேடும் உறவுகளின் தேக்கமான ஏக்கங்கள்”(காணாமற் போனோர் தினத்திற்கான சிறப்புக்கவி)

ஏக்கம் மனதை வாட்ட
தேக்கமாய் நினைவுகள் புதைய
துக்கம் தொண்டையை அடைக்க
தூக்கத்தைத் தொலைத்து
ஏக்கத்தை தேக்கமாக்கி
தேடும் உறவுகளைத் தேடித் தேடி
பூத்தவிழி பூத்திருக்க
தொடர்கிறது காத்திருப்பு !

வருவார்கள் என்ற நம்பிக்கையில்
நகர்கிறது நாட்களும்
வருடமும் பதினொன்றை
கடந்து விட்டது
கண்துடைப்பும் தொடர்கிறது
காணாமல் ஆக்கப் பட்டோர்
இன்றுவரை விடையில்லை !

உறவுகளைத் தேடி ஏங்கி ஏங்கி
உருக்குலைந்து போயினரே உறவுகள்
தலைவனைத் தொலைத்த குடும்பங்களாய்
பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோராய்
பெற்றோரைத் தொலைத்த பிள்ளைகளாய்
ஏங்கித் தவிக்கின்றனரே !

விம்மலோடும் விசும்பலோடும்
கண்ணீரோடும் கம்பலையோடும்
ஏக்கங்களை மனதில் புதைத்து
நம்பிக்கை வேர்களைப் பற்றியபடி
நலிவோடு நகர்கிறது ஏதிலியர் வாழ்வு !

வீதிகளிலும் தெருக்களிலும் நின்று
நீதி கேட்ட போதும்
நீதிக்கு கிடைக்கவில்லை நியாயங்கள்
நாதியற்று தவிக்கின்றனரே உறவுகள்
சர்வதேசமே தேடும் உறவுகளுக்கு என்ன பதில் ?
இருக்கிறார்களா? இல்லையா ?
இரண்டில் ஒன்றையாவது கூறி விடுங்கள்
ஆத்மசாந்தி பிரார்த்தனையாவது செய்து
தேடும் உறவுகளுக்கு அஞ்சலியைச் செலுத்தட்டும் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)  30.08.2020

பகிரவும்...