Main Menu

“தாகம்” (சர்வதேச தண்ணீர் தினத்திற்கான சிறப்புக்கவி)

தாயகத் தாகம் எனை வாட்ட
தமிழ்த் தாகமோ மேவிநிற்க
கவித் தாகம் எழிலூட்ட
தண்ணீர்த் தாகம் வலுவூட்ட
எத்தனையோ தாகங்கள்
என் மனதின் ஏக்கங்கள் !

தீராத் தாகம் பலவுண்டு
தணியாத தாகமும் சிலவுண்டு
உடலின் தாகம் தண்ணீரே
உயிர்ப்பின் தாகமும் தண்ணீரே
உயிர் வாழ ஆதாரம் தண்ணீரே !

நீரின்றி உலகில்லை
நீரின்றி உயிர்களில்லை
மேகம் தருமே மழைநீர்
தாகம் தணிக்குமே தண்ணீர்
விக்கலைப் போக்குமே தண்ணீர் !

மேகத்திரையின் கொடையாகி
வேதிப் பொருட்களின் கூட்டாகி
பஞ்ச பூதங்களில் ஒன்றாகி
பூமிப் பந்தில் பாதியாகி
தாகம் தீர்க்கும் தண்ணீரே
தேகம் காக்கும் அருமருந்தே
நீயின்றி நாம் ஏது ?

பூமியின் வளத்திற்கு
பூக்களின் செழுமைக்கு
மானிட வாழ்விற்கு
மக்களின் தேவைக்கு
வனத்தின் வனப்பிற்கு
உயிரின வாழ்விற்கு
பயிரின வளர்ச்சிக்கு
தாகம் தீர்ப்பது தண்ணீரே !

தண்ணீர் எங்கள் உயிர்நீர்
தாகம் தீர்க்கும் பெருநீர்
எம் உயிர் ஆதாரம் தண்ணீர்
வாழ்வின் அமுதம் தண்ணீர்
இயற்கையின் கொடையும் தண்ணீரே !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 22.03.2021

பகிரவும்...