Main Menu

காந்தள் பூக்கள் “ கவியாக்கம்…ரஜனி அன்ரன் (B.A)

கார்கால மேகம்
கருக்கொண்ட வேளையிலே
கார்த்திகைத் திங்களில்
மழை நீரை உறிஞ்சி
நிலத்தைக் கிழித்து எழுந்து
படர்ந்து திரண்டு கொடியாகி
பூபாள விடியலாய் முகைவிட்டு
பூத்துக் குலுங்கும் காந்தள்களே !

கை கூப்பித் தொழுவது போல்
மஞ்சள் சிவப்பு வர்ணமாகி
மஞ்சரி போல் பூத்து
அகல் விளக்காய் ஒளிர்ந்து
அக்கினிக் கலசமாய் ஒளி தரும்
அழகான காந்தள்களே !

எம் தேசத்தின் தேசீயப் பூவாகி
தேசப் புதல்வர்களை ஆராதிக்க
தேவனால் அனுப்பப் பட்ட தூதுவரோ நீவிர்?
எம் தேசத்திற்கு மட்டுமல்லாமல்
தமிழ் நாட்டின் மாநில மலராகவும்
சிம்பாவே நாட்டின் தேசீய மலராகவும்
சிறப்பினையும் பெற்றீரே !

ஆறுமுகனான முருகனுக்கும்
உகந்த மலராகி
ஆறு இதழ்களைக் கொண்டு
அகல் விளக்காய் ஒளிரும்
அற்புதக் காந்தள்களே
ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் மலரும்
அதிசயப் பூக்கள் நீவிர் அல்லவோ !

காந்தமான காந்தள்களே
சங்க இலக்கியங்களில்
பங்கமின்றியே வர்ணனையாகி
மங்கையரின் கை விரல்களுக்கு உவமையாகி
மன்னர்கள் போருக்குச் சென்ற போதெல்லாம்
மாலையாக்கி கழுத்திலே சூடி
வெற்றி வாகையோடு திரும்பியதை
வரலாறும் செப்பி நிற்கிறதே !

இனிமையான காந்தள்களே
தேனை அதிகமாகக் கொண்டதனால்
தேனீக்களும் வண்டுகளும்
எப்போதும் உமை வட்டமிடுமாம்
பூக்களெல்லாம் ஓர் மாலைக்குள்
வாடி உதிர்ந்து விட
நீவிர் மட்டும் வாடினாலும் உதிர்வதில்லையாமே
ஆராதனைப் பூக்கள் அல்லவோ நீவிர் !

கனத்த கார்த்திகையில்
கண்கள் பனித்திருக்க
கலகலத்துப் பூத்திருக்கும் காந்தள்களே
மாவீரத் தெய்வங்களை பூசிக்கவே
ஆண்டிற்கு ஒருமுறையாக
அனுப்பி வைத்தானோ இறைவனும்
மாவீரர்களாலே மகிமை பெற்றீர்களே
மாட்சிமை மிக்க காந்தள்களே !

“ காந்தள் பூக்கள் “
கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 01.11.2018

பகிரவும்...