Main Menu

” ஆசிரியமும் நானும் ” கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

எழுத்தை அறிவித்தவன் இறைவன்
எழுத்தை எடுத்து இயம்புபவன் ஆசான்
எந்தத் துறைக்குமே ஈடாகாத ஆசிரியம்
எல்லாத் துறையினரையும் உருவாக்குவது
மகத்துவமான ஆசிரியம் மட்டுமே
மன நிறைவைத் தந்ததே எனக்கும் !

அகில உலக ஆசிரிய தினமாம்
அக்டோபர் ஐந்தில்
ஆசான்களைப் போற்றிடுவோம்
அவர் தம் பணிகளை நினைத்திடுவோம்
என் ஆசானின் கற்பித்தலும் என் கனவும்
என்னையும் இணைத்ததே ஆசிரியத்துக்குள் !

திருக்குடும்ப கன்னியர்மடம்
ஆங்கிலப் பாடசாலையில்
உயர்தர வகுப்பு ஆசிரியையாகி
உன்னத சேவை ஆற்றிய காலம்
ஆழுமை மிக்க அதிபர் சிஸ்ரர் ஜோலன்ட்
அன்பான ஆசிரியர் குழாம்
அறிவாற்றல் மிக்க மாணவிகள்
போர்க்கால சூழலிலும் பொற்காலமே எனக்கு !

ஆண்டுகள் மூன்று மட்டுமே
தொடர்ந்தது என் ஆசிரியப்பணி
வாழ்வின் நிமித்தம் புலம்பெயர்வு
விடை பெற்றேன் கண்ணீரோடு
கன்னியர் மடத்தை விட்டு
கண்ணியமான மாணவிகள் குழாமை விட்டு
பெற்றோரை உற்றோரை உறவுகளை விட்டு !

புரியாத மொழி தெரியாத உறவுகள்
வாழ்வு தொடர்ந்தது புலம்பெயர் மண்ணில்
எந்தத் தொழிலையும் ஏற்க மறுத்தது மனம்
மனதில் ஓர்மமானது ஆசிரியம் மட்டுமே
மொழியைக் கற்றேன் அடிப்படையிலிருந்து
தொழிற்கல்வி பயின்றேன் முறையாக
பயிற்சி பெற்றேன் ஜேர்மன் பள்ளியில்
ஆண்டுகளும் கடந்தது ஆர்வமும் குறையவில்லை !

கிடைத்தது சிறுவர்பள்ளி ஆசிரியமும்
பல்லினச் சிறுவர்கள் பண்பான அதிபர்
அன்பான ஆசிரிய குழாம்
வேற்றுமொழி ஆனாலும்
வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்னை
மனதிற்குப் பிடித்த ஆசிரியம்
மகிழ்வோடு தொடர்கின்றேன்
மனசு நிறைகிறது மகிழ்வையும் தருகிறது !

(சர்வதேச ஆசிரியர் தினத்திற்கான சிறப்புக்கவி)
கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 6/10/2018

https://www.youtube.com/watch?v=AUzT_5QIRYI&feature=share

பகிரவும்...