Main Menu

“ அமுதுப்புலவர் “ ( நினைவுக்கவி )

அமுதுக்கு ஒப்பான தமிழுக்கு
அழகு சேர்த்தார் அமுதுப்புலவர்
பசுந்தீவாம் நெடுந்தீவில் பிறந்த போதும்
புகுந்த வீடு இளவாலை என்பதனால்
இளவாலை அமுது எனவே
அன்போடு அழைக்கப் பட்டாரே !

பல்கலைக் கழக படிப்பை முடித்து
ஆசிரியப் பணியை அன்புடன் ஏற்று
இலக்கியத் துறையில் நாட்டம் காட்டி
இலக்கியச் செழுமையை மாணவருக்கு ஊட்டி
மாணவ சமுதாயத்தைக் கூட்டி
மாண்புடனே வழி நடாத்தி
மாபெரும் வெற்றியையும் கண்டாரே !

கல்விமான்களின் தொடர்பும்
பேராசான்களிடம் கற்ற கல்வியும்
ஈழத்து இலக்கிய உலகிற்கு
இனம் காட்டியதே அமுதுப்புலவரை
ஆசிரியர் அதிபர் எழுத்தாளர்
கவிஞர் நாடக ஆசிரியரென
வலம் வந்தாரே இலக்கிய உலகில் !

அமுதுப்புலவரின் ஆழ்ந்த தமிழ்ப்பற்றும்
ஆர்வமாய் எழுதிக் குவிக்கும் ஆற்றலும்
அன்போடு பழகும் விதமும்
அனைவரையும் அரவணைக்கும் பாங்கும்
அளவிட முடியா இலக்கியத் தாகமும்
அவருக்கே உரித்தான தனித்துவங்கள் !

பார் போற்ற வாழ்ந்த போதும்
பல நூல்கள் யாத்த போதும்
பட்டங்கள் பல பெற்ற போதும்
உலகின் உன்னத விருதாம்
செவாலியர் விருதை
புனித பாப்பரசரிடமிருந்து
பெற்ற போதும் கர்வமின்றி
மக்கள் மனதில் மாணிக்கமானாரே !

ஈழத்து இலக்கிய உலகிலும்
புலத்து வாழ்வினிலும்
கவிதை நாடகம் சிறுகதைகளென
ஈடில்லா சாதனைகள் புரிந்து
நூற்றாண்டு விழாக் கண்ட
அமுதுப் புலவரை அக்டோபர் 23 இல்
அழைத்துச் சென்றானே காலனும் விரைந்து
அர்த்தமுள்ள அவர் வாழ்வை நினைத்திடுவோம் நாமும் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...