மேதினியில் மறக்கலாமோ மே பதினெட்டை ???
மேதினியே கலங்கி நின்ற
மே பதினெட்டு மேதினியின் கறைபடிந்தநாள்
மேகக் கூட்டம் கரும்புகையால் கட்டுண்டநாள்
மேலாதிக்க வாதிகளால் எம் உறவுகள்
சின்னா பின்னமாக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நாள்
கொத்துக் குண்டுகளால் கொன்று குவிக்கப்பட்டு
எரிகுண்டுகளால் எரியூட்டப் பட்ட நாள்
மேதினியில் மறக்க முடியுமா?
முள்ளி வாய்க்கால் முற்றத்தை
கொள்ளி வைத்த கொடியவர்கள்
இனப் படுகொலையை அரங்கேற்றி
நரபலி வேட்டையில் தாண்டவமாடி
மொத்தமாய் கொன்று குவித்து
குளிர் காய்ந்த கொடிய நாளாம்
மே பதினெட்டை மேதினியில் மறக்கலாமா ?
கந்தக வாடைக்குள் கலவி
குருதி ஆறாகப் பாய்ந்து
நந்திக் கடலே செந்நீராகி
வெந்து மடிந்த எம் உறவுகளின்
மூச்சுக் காற்று முனகலாகி
சொந்தங்களைத் தேடியபடி
விம்மலாய் இப்போதும் ஒலிக்கிறது !
மே பதினெட்டு வாழ்வின் துயரநாள்
உயிர்கள் துடிதுடித்த நாள்
கண்ணீர் கடலில் மூழ்கிய நாள்
மனிதமே மரணித்த நாள்
மனிதநேயம் பொசுங்கிய நாள் !
மன்னிக்க முடியாத
பேரவலங்கள் அரங்கேறிய நாள்
சர்வதேசமும் அமைதி காத்த நாள்
சர்வாதிகாரம் நாசம் செய்தநாள்
போதுமினி இவ் அவலங்கள்
மேதினியே தாங்காது
நீதிக்காய் குரல் கொடுப்போம்
அநீதியை எதிர்த்திடுவோம் !
கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 18.05.2019