Main Menu

1ம் ஆண்டு நினைவு தினம் – அமரர். செல்லையா தியாகராஜா (17/10/2026)

தாயகத்தில் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Villeneuve-Saint-Georges ஜ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர். செல்லையா தியாகராஜா அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாளும், கண்ணீர் அஞ்சலி பிரார்த்தனையும் 17ம் திகதி சனிக்கிழமை அக்டோபர் மாதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

அமரர். செல்லையா தியாகராஜா அவர்களை அன்பு மனைவி சகுந்தலா, சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமார், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.

அமரர். செல்லையா தியாகராஜா அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து நினைவு கூருகின்றோம் .

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அன்னாரின் அன்பு மனைவி திருமதி. சகுந்தலா அவர்கள்.

அவருக்கும் எமது நன்றி

 

நினைவுகளில் நீங்கள் அழியாத அத்தியாயம்

எம் வாழ்வின் அழகிய அத்தியாயமாய் தொடங்கிய காதல்,
இன்று அழியாத நினைவுகளாய்
என் மனதில் மௌனமாய் ஊஞ்சலாடுகிறது.

நாற்பத்தொன்பது ஆண்டுகள்—
நாட்களல்ல,
நம் அன்பால் எழுதப்பட்ட
இனிய வாழ்க்கையின் பக்கங்கள்.

இன்பத்திலும் துன்பத்திலும்
குடும்பத்தின் ஆணிவேராய்,
என் வாழ்வின் வழித்துணையாய்,
பேரன்பைப் பகிர்ந்து கொண்டோம்.

காலம் நகர்கிறது…
ஆனால் என் சிந்தனைகள் மட்டும்
அந்த இறுதிக் கணங்களிலேயே
இன்னும் உறைந்து கிடக்கின்றன.

நம் வீடு இன்று……..
உங்கள் சிரிப்பும், குரலும் இன்றி
வெறுமைக்கோலமாக நிற்கிறது.
என்னை அழைத்த உங்கள் குரலோசை
இன்றும் என் செவிகளில்
மெல்ல எதிரொலிக்கிறது.

கம்பீரமான உங்கள் தோற்றமும்,
ஆழமான உங்கள் பார்வையும்,
மலர்ந்த புன்னகையும்,
என் கனவுகளில் இன்னும்
உயிரோவியமாய் தோன்றுகின்றன.

உடல் பிரிந்தாலும்
நம் அன்பு பிரியவில்லை.
உங்கள் நினைவுகளே
இந்தக் கனத்த இதயத்தின்
காயங்களுக்கு மருந்தாகின்றன.

நீங்கள் என்னுடன் வாழ்ந்த
நாற்பத்தொன்பது ஆண்டுகள்
என் வாழ்வின் ஒரு பகுதியல்ல—
என் வாழ்வே!

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”