Main Menu

நட்பென்று நினைத்தாலே…… (நண்பர்கள் தினத்திற்கான சிறப்புக்கவி)

நட்பிற்கென தனி இலக்கணத்தை
வகுக்கவில்லை யாரும்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி
எழுதாத காவியமாய்
தனி வழியென வீறுநடை போட்டு
வாழ்வோடு பயணிக்கிறது தூயநட்பு !

எந்த அகராதியிலும்
அர்த்தம் காண முடியா உறவு
இரத்த உறவை விட மேலான உறவு
பகிர முடியாத இரகசியங்களை எல்லாம்
பகிர்ந்து கொள்ளும் உறவு
தூய்மையான நட்பென்ற உறவே !

நட்பென்று நினைத்தாலே
நினைவுகள் அலைமோதும்
ஞாபகங்கள் சிறகடிக்கும்
பள்ளியில் கலாசாலையில்
பணியில் புலத்தில் ஊடகத்தில் என்று
மனதோடு மலர்ந்த நட்புக்களை
நன்றியோடு நினைக்கிறேன் நானும்
பட்டாம்பூச்சியாய் வட்டமடிக்குதே மனமும் !

நட்பிற்கு இலக்கணமாய்
கர்ணனும் துரியோதனனும்
கபிலரும் பாரியும்
கம்பரும் சடையப்ப வள்ளலும்
ஔவையும் அதியமானுமென
உயிரூட்டப் பட்டனரே
இதிகாசங்களிலும் இலக்கியங்களிலும் !

புலத்து வாழ்வு தனில்
முகம் தெரியா உறவுகளும்
ஊடக உறவுகளும்
பணியிடத்து உறவுகளும்
வேறுபாடு ஏதுமின்றி
நட்பாக பழகுகின்றார்
நயமாகப் பேசுகின்றார்
நட்பிற்கு களங்கமின்றி !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...