” சித்திரை நிலவே “
சித்திரை நிலவே சிங்கார மலரே
இத்தரை மீது இன்னிசை பொழிய
பத்தரை மாற்றுத் தங்கமாய்
பெளர்ணமி நிலவாய் ஒளிவீச
புத்தாண்டு மலராய் பூத்து மணம் பரப்ப
புன்னகை சிந்தி பூரிப்போடு வந்துவிடு !
இளவேனில் காலத்தின்
இதமான தென்றலாய்
இங்கிதமாய் வந்துவிடு
இன்னல்களைத் தீர்த்துவிடு
இம்சைகளைத் துரத்திவிடு
இருகரமும் கூப்பி வரவேற்கிறோம் !
அறுபது ஆண்டின் சுழற்சியில்
முப்பத்தி மூன்றாவது ஆண்டாய்
முழுநிலாவாகி பிரகாசித்து
விகாரி ஆண்டாய் பூத்துக் குலுங்கி
பிரகாசம் பொங்க சீக்கிரமாய் வந்துவிடு
சித்திரை நிலவே சிங்கார மலரே !
விகாரி வருஷம் விடியலைத் தரட்டும்
நஞ்சையும் புஞ்சையும் செழிக்கட்டும்
பஞ்சம் பறந்து போகட்டும்
நானிலத்திலும் பசுமை கொழிக்கட்டும்
நாடும் வீடும் நன்மை பெறட்டும்
பிரகாசம் பொங்க பிரமாதமாய் வந்துவிடு
உன் வரவு நல்வரவாகட்டும் !
கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 14,04,2019