Main Menu

கருவறை வாசனை

அன்புள்ள அம்மா ,
கடவுளின் மடியில்
விளையாடிக் கொண்டிருந்தேன்.
கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி ,
என்னை ,
உன் கருவறைக்குள் பிரவேசிக்கச்
செய்தார் , கடவுள் !
இருட்டாக இருந்தாலும் ,
இதமாக இருந்தது இந்தப் புதிய
இடம்..
முதலில் பயமாக இருந்தாலும் ,
பிறகு சந்தோஷமாக வளரத்
தொடங்கினேன் !
நீ சிரிக்கும் பொழுது ,
நானும் சிரித்தேன்..
நீ அழும் பொழுது ,
நானும் கண்ணீரில் …
பிறகு தான் புரிந்தது
நம்மிடையே ஒரு புது உறவு மலர்ந்தது என்று …
ஆமாம்
நீ என் அம்மா !
“அம்மாவும் நான் தான் ”
– கடவுள் சொல்லி இருக்கிறார் !
இன்னொரு கடவுள் அம்மாவா – இல்லை
அம்மா இன்னொரு கடவுளா ?
தெரியவில்லை …
இப்படி பல விஷயங்களை
யோசித்துக்கொண்டே வளர்ந்தேன் !
உன்னை பார்க்க வேண்டும் போல்
இருந்தது ,
ஏனென்றால் நீ கடவுளின் சாயல் !
அப்பொழுது தான்
ஒரு தீராத வலி என்னை ஆட்கொண்டது ,
ஒரு அரக்கன் என் உடலசைவுகளைச்
செயலிழக்கச் செய்தான் …
ஓரிரு நிமிடங்களில் என் போராட்டம்
தோல்வியில் முடிந்தது ।
நான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்
இழந்தேன் ॥
உன்னை பார்க்கமலே
உன்னை பிரிகிறேன்…
எனக்கு பிடித்தமான அந்தக்
கோவிலை விட்டும்…
உன்னோடு விளையாட ஆசைப்பட்டேன்
என் பிறப்பே விளையாட்டாகப்
போய்விட்டது
அந்த வெளிச்சத்து வாசிகளுக்கு …
மீண்டும் அதே கடவுளின் மடியில் ..
அதே விளையாட்டுக்கள் தான் …
புதியதாக இன்னொரு ஆசையும்..
மீண்டும்அதே இருட்டறையில் ,
உன் அன்பு மகளாக உலா வர வேண்டும் …
மீண்டும் நுகர வேண்டும் ,
உன் கருவறை வாசனையை …
இப்படிக்கு ,
பிறவாத உங்கள்
குட்டிப்பாப்பா …