Main Menu

உழைப்பே…பிழைப்பு

அன்றாடம் உழைப்பவனுக்கு
உழைப்பே பிழைப்பு
உழைப்பவனைச் சார்ந்து வாழ்பவனுக்கு
அதுவே பிழைப்பு
அரும்பாடு பட்டு உழைத்தால்
வந்திடுமே வாழ்வில் உயர்வு
இல்லையேல் வந்திடும் தாழ்வு !

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட
வாழ்வியல் பாதையை நகர்த்திட
வாழ்வில் சாதனைச் சிகரத்தை தொட்டிட
மனிதனுக்கு வேண்டும் பிழைப்பு
பிழைப்பிற்கு வேண்டும் கடின உழைப்பு
உழைப்பே பிழைப்பிற்கு திசைகாட்டி
உழைப்பே உயர்விற்கு நல் நெறிகாட்டி !

உழைப்பும் பிழைப்பும்
இரண்டறக் கலந்த உறவு
உழைப்பவன் கைகள்
உன்னதம் பெறுமே உலகில்
உலகமே உழைப்பாளியின் நிழலில்
உல்லாசமாய் குளிர் காய்கிறதே !

உழைப்பாளியின் குறிக்கோளே உழைப்பு
உறுதி கொண்ட நெஞ்சுரமே
உழைப்பாளியின் சொத்து
உழைப்பாளிக்கு நிகர் யாருமில்லை
உலகில் உயர்ந்தவன் உழைப்பாளியே !

உழைப்பையும் பிழைப்பையும்
உழைப்பாளியின் கைரேகை சொல்லும்
உழைப்பின் உச்சத்தை
அவனின் வியர்வையின் உஷ்ணம் சொல்லும்
உழைப்பும் பிழைப்பும்
எப்போதும் எம் கைகளிலே தான் !

சிற்பியின் உழைப்பில்
கல்லும் சிலையாகும்
கவிஞனின் உழைப்பில்
கவிகள் படையலாகும்
கலைஞனின் உழைப்பில்
கலைகள் எழிலாகும்
உழைப்பாளியின் உழைப்பும் பிழைப்பும்
உலகத்தையே வாழ வைக்கும்
இதுவே விலைமதிப்பில்லாத உடல் உழைப்பு
உழைப்பும் பிழைப்பும் இரட்டைப் பிறவிகள் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 23.05.2019