Main Menu

இருப்பும் இறப்பும்

அந்த மரம் வெகு அமைதியாக
நெடுங்காலமங்கே நின்றுகொண்டிருந்தது
தளிர்த்தும் துளிர்த்தும் ஓங்கிய வளர்ந்து
கனிந்து நின்றது

பின்னர் யார்யாருக்கோ குறிவைத்த
குண்டுகள் ஷெல்கள் அதன்
உடலைத்துளைக்கத் தொடங்கின

தினமும் காயம் பல பட்டு
வலி சுமந்தாயினும் உயிர்
பிழைத்து நின்றது அம்மாமரம்

பின்னர் வாழ்வு என்பது தினமும்
காயம் கண்டல் நோவு
குருதி குமுறல் என்றாச்சு

பழைய ரணங்கள் ஆறமுன்னே
மீண்டும் புதிய புதிய ரணங்கள்
தலைமைக் கிளையும்
சிறுகிளைகளும் மடிந்து கருகி
பட்டுப்போக மூலவேரில்
கொஞ்சம் உயிரைத்தாங்கி
நொந்து முனகிக் கொண்டே
கோமாவில் வாழ்ந்தது பலகாலம்

பின்னர் ஒருநாள் காலை
அதன் மரணம் அறிவிக்கப்பட்டது

அதன் உறவுகள் பல கோடி
அம் மாமரத்தின் பெயர்
மனிதம்.

– காருண்யன்

பகிரவும்...
0Shares