“ அனலுக்குள் பொசுங்கிய நூலகம் “(சிறப்புக்கவி)
குடாநாட்டு மக்களின்
விடா முயற்சிக் கல்விக்கு
வித்தாரமாய் விளங்கி
முத்தாரம் பதித்து
புத்தி ஜீவிகளைத் தோற்றுவித்து
ஆலமர விருட்சமாய்
ஆதார சுருதியாய்
அறிவுச் சுரங்கமாய் விளங்கிய
அரிய யாழ் பொதுசன நூலகத்தை
வைகாசித் திங்கள் முப்பத்தியொன்றில்
பொறிக்குள் பொசுங்க வைத்தனரே !
தமிழரின் நிலையான சொத்து
தலைமுறை தலைமுறையாய்
தடங்கள் பல பதித்து
அறிஞர் பெருமக்களை உருவாக்கி
அறிவுப்பசி தீர்த்த அறிவாலயத்தை
ஆசியாவின் அறிவுச் சுரங்கத்தை
அனலுக்குள் பொசுங்க வைத்தனரே நீசர்கள்
ஆண்டுகள் முப்பத்தியெட்டும் கடந்ததே
ஆறவில்லையே இன்னும் காயங்கள் !
தேடற்கரிய தேட்டங்கள்
ஏட்டுச் சுவடிகள் ஆராட்சிக் கட்டுரைகள்
பழந்தமிழ் நூல்களை எல்லாம்
அனலுக்குள் பொசுக்கி அழித்தனரே
அறிவாலயமும் சாம்பல் மேடாகியதே !
வீறுகொண்ட மக்களின்
ஆற்றலை அறிவினை
கூறு போட்டு அழித்தாலும்
கொன்று தான் குவித்தாலும்
எரிந்த சாம்பலில் இருந்து
பீனிக்ஸ் பறவையாய்
எழுந்து வருமே அறிவுச்சுரங்கம் !
அனலுக்குள் பொசுங்கியும்
மீண்டும் அதேயிடத்தில்
புன்னகை சிந்தி புதுப்பொலிவோடு
பூத்துக் குலுங்குது பொதுசன நூலகம்
தேவதை போலவே தேவையை வழங்குது
நடுநாயகமாய் நகரின் மத்தியில்
மிடுக்கோடு தலை நிமிர்ந்து நிற்குதே
யாழ் பொதுசன நூலகம் இன்று !
ரஜனி அன்ரன் (B.A) 31,05,2019