Main Menu

“ கவியரசே கண்ணதாசா “( பிறந்தநாள் சிறப்புக்கவி )

சிறுகூடல் பட்டியில்
ஆனித் திங்கள் இருபத்தி நான்கில் உதித்து
நறுக்காக பல கவிகள் தொடுத்து
மறுக்காமல் அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து
சறுக்காமல் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு
சிருங்காரக் கவிகளைப் படைத்தாரே !

கண்ணன் மேல் காதல் கொண்டு
கம்பனது காவியத்தில் திளைத்து
வள்ளுவனின் குறளோவியத்தில் லயித்து
திருமூலரின் திருமந்திரத்தில் மூழ்கி
திறம்பட பல கவிகளைப் படைத்தாரே !

கன்னியின் காதலியில்
தொடங்கிய கவிப்பயணம்
கனிரசமாய் பொழிய
மூன்றாம் பிறையோடு
முற்றுப் பெற்றதே
கவியரசரின் கவிப்பயணம் !

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட கானங்கள்
நூற்றிற்கும் மேற்பட்ட நூல்கள்
காப்பியங்கள் சிற்றிலக்கியங்கள்
கவிதாஞ்சலிகள் புதினங்கள்
கட்டுரைகள் சிறுகதைகள்
நாடகங்கள் சுயசரிதைகள்
மொழி பெயர்ப்புக்கள் என
இலக்கியப் படைப்புக்கள்
பல்வேறு பக்கங்களாய்
இலக்கிய உலகை அலங்கரித்ததுவே !

கவியரசே கண்ணதாசா
புவியரசையும் கவியால் வென்றவரே
அள்ள அள்ளக் குறையாத
அட்சய பாத்திரமான உம் கவிகள்
ஊழியுள்ள காலம் வரை
என்றும் ஒலிக்குமே
மக்கள் மனதிலும் நின்று நிலைக்குமே !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 24,06,2019

பகிரவும்...