உன் கூந்தல்!
முகத்தின் ஒளியில் கருகியதுதான் – உன்
கூந்தலோ!
அதன் கருமை கண்ட
அந்த அண்டங் காக்கைக்கும்
ஆனந்தம்!
தனக்கொன்று இல்லை என்று
தனக்குள் வருந்திய நிலவின்
தாக்கம் எனக்கு மட்டும்
தெரியும்!
கார்கால மேகமென கண்ட
கானகத்து மயிலும்
கொண்டை உயர்த்தி
தோகை விரிக்கக்
கண்டேன்!
தமிழ் கரைக் கண்ட
நக்கீரனுக்கு – நீ
முன்னோளாகி இருந்தால்
கூந்தலில் மணம்
உண்டோ என்ற வாதம்
வந்திருக்குமோ ?
உன்னை படைத்த
உன்னத பிரம்மனுக்கு,
உன் முகம் என்னும்
உல்லாச நிலவுக்கும்
உலகமெனும் உருண்டைக்கும்
கூந்தலெனும் உறவு வைக்க
ஆசை!
சன்னலோரத் தென்றலில்
சின்னதாய் அசையும்
உன் கூந்தல் கண்டு
மெல்லிய கொடியிலாடும்
மலர்ந்த மல்லிகைக்கும்
உன் கூந்தலேறி
ஊஞ்சல் ஆட
ஆசை!