உணர்வுப் பகிர்வு – எழுச்சிக்குரலோன் சாந்தன்
இந்த மண் எங்களின்
சொந்த மண் என
ஈழத்தார் விழிநுழைந்து
உலகத்தார் வழி புகுந்தவனே !!
ஈழத்து உணர்வுகளை
காலத்தில் உன் குரலோடு
ஞாலத்தில் உணர்வோடு
சாலத்தந்தவனே !!
இயமன் உன் மூச்சை
இறுக்கிய கணங்களில் -உன்
தாகத்தை நானறிவேன் அந்த
பாவத்தை அவனறிவான்
என்னோடு துணையிருந்து
எல்லாம் சொன்னவனே
பின்னின்று சொல்லாமல் -யாவும்
முகமுன் சொன்னவனே
கால அளவுகளில் -நீ
காணாமல் போயிருக்கலாம்
ஈழம் மலருகையில் -உன்
இருப்புக்களும் ஒளிர்வுபெறும்
அங்கயன் என்று நீ
அடுத்தவர் போல் அழைக்காமல்
தம்பி என்று நீ
தாராளமாய் அணைத்தவனே
உன்பிரிவு எனக்குள் ஏதோ
உணர்வுகளை பெருக்குதையா
நமக்குள் பிரிவு வந்ததென்று
நம்பமனம் மறக்குதையா
தெம்பு மனம் தந்தவனே
தெவிட்டாத குரலோனே
வம்பு இது உன் இழப்பு -சாந்திக்காய்
வரனவனை வணங்குகிறேன்
சாந்தியடையும் உன் ஆன்மா
சாந்தியடையாது என் ஆன்மா
பிந்தி நான் பிறந்திடிலும் -உன்வழியில்
முந்தி நாம் செல்வோமையா !!!