ஆச்சி எங்கள் ஆச்சி
மறைவதற்கு பிறந்தவரே மறைந்து போவார்
மனதாளப் பிறந்தவர்கள் மறைந்தா போவார்.
திரை உலகை மட்டுமல்ல தமிழர் தமை
தினந்தோறும் மகிழ வைக்கப் பிறந்தவரா
விரைந்து நம்மை விட்டு விட்டுப் போய் விடுவார்
வீணாக அழ வேண்டாம் வாழ்த்தி நில்லும்
அரைகுறையா இல்லை ஒரு முழுப்பெருமை
அண்ணன்சிவாஜி தங்கை மாய்ந்தா போவார்
மனோரமா ஆச்சி என்றால் மனம் நிறையும்
மாபெரிய வெற்றிகளில் மனம் தளும்பும்
இன மானம் கொண்டவர்காண் நமது மண்ணின்
இயல்பறிந்து வாழ்ந்தவர் காண் தமிழின் பெண்ணாள்
குண நலத்தில் அனைவரையும் வென்றவர் காண்
கூத்தாட்டும் இறைவனையும் சிரிக்க வைப்பார்
இனப்பெருமை இனப் பெருமை இனப்பெருமை
எங்கள் ஆச்சி தமிழினத்தின் பெருமை அன்றோ
– நெல்லை கண்ணன்