Main Menu

வன்முறை களமாக மாறிய ஹாங்காங் – நாடாளுமன்ற கட்டிடம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

வன்முறை களமாக மாறிய ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம் உருவானது.

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் 31-வது வாரத்தை எட்டி உள்ளது. இதற்கிடையில், ஹாங்காங்குக்கு சர்வதேச ஓட்டுரிமை மறுக்கப்பட்டதின் 5-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று முன்தினம் மாபெரும் பேரணி நடைபெற்றது.

தடையை மீறி இந்த பேரணி நடந்ததால், போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர். இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

ஹாங்காங்கின் பல்வேறு நகரங்களிலும் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக ஹாங்காங் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதி கலவர பூமியாக காட்சி அளித்தது.

போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம் உருவானது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்றனர்.

ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்காததை தொடர்ந்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, ரப்பர் குண்டுகளாலும் சுட்டனர். போராட்டக்காரர்களை எச்சரிக்க போலீசார் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிகிறது.

போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல் இரவு முழுவதும் நீடித்தது. பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகளை தீவைத்தனர்.

இதற்கிடையில் நள்ளிரவில் போராட்டம் சற்று ஓய்ந்த பிறகு, போலீசார் அங்குள்ள 2 சுரங்க ரெயில் நிலையங்களுக்குள் அதிரடியாக நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என கூறி பலரை கண்மூடித்தனமாக தாக்கி கைது செய்தாக கூறப்படுகிறது. 40-க்கும் அதிகமானோர் இப்படி கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தின் சேவையை முடக்கும் விதமாக நேற்று காலை விமான நிலையத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பகிரவும்...