3 வருடங்களாக விவசாயியின் வயிற்றுக்குள் இருந்த பிரம்மாண்ட கல்
சீனாவின் தெற்கு குவாங்டாங் (Guangdong) மாகாணத்தைச் சேர்ந்த 56 வயதான சென் (Chen) என்ற விவசாயி, கடந்த மூன்று வருடங்களாகச் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான மரண வேதனையை அனுபவித்து வந்த நிலையில், இறுதியாக மருத்துவமனைக்குச் சென்றபோது அவரது சிறுநீர்ப்பையில் (Bladder) 1.3 கிலோ கிராம் எடையுள்ள பிரம்மாண்டமான கல் இருந்தமை கண்டறியப்பட்டு, அது அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
இந்த இமாலயக் கல்லானது சுமார் 10 சென்டிமீட்டர் நீளமும் 13 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக இருந்ததுடன், மேற்கு குவாங்டாங் பிராந்தியத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பாரிய சிறுநீர்ப்பைக் கல் இதுவெனக் குவாங்டாங் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த சுவென் மருத்துவமனை (Xuwen Hospital) மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயியான சென், தனது அன்றாட விவசாய வேலைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் மருத்துவமனைக்குச் செல்லாமல், தனக்குத்தானே மருந்துகளை வாங்கி உட்கொண்டு வீரியமற்ற முறையில் சுய மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
எனினும், அண்மைக்காலமாக அவரது உடல்நிலை மிக மோசமடைந்ததால், பகல் வேளையில் தூரப் பயணங்களை மேற்கொள்ள முடியாமலும், இரவில் தூங்க முடியாமலும் தவித்துள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில், இந்த அசுரக் கல்லானது அவரது முழுச் சிறுநீர்ப்பையையும் ஆக்கிரமித்திருந்ததுடன், இரண்டு சிறுநீரகங்களையும் வீங்கச் செய்து (Bilateral Hydronephrosis) கடுமையான சிறுநீர்க்குழாய் தொற்றையும் (UTI) ஏற்படுத்தியிருந்தது அம்பலமானது.
சரியான நேரத்தில் சிகிச்சை பெறாதிருந்தால், இது அவரது சிறுநீரகச் செயல்பாட்டை முழுமையாகப் பாதித்து ‘யுரேமியா’ (Uraemia) எனப்படும் உயிராபத்தான நிலைக்கு இட்டுச் சென்றிருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இரண்டு மனிதக் கைகளின் முஷ்டி அளவிற்குப் பெரியதாக இருந்த அந்தக் கல்லை மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக அகற்றியுள்ளதைத் தொடர்ந்து, சென் தற்போது மிக வேகமாகக் குணமடைந்து வருகிறார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சிறுநீரக நிபுணர்கள், நீண்ட நேரம் சிறுநீரை அடக்குதல், போதிய அளவு தண்ணீர் குடிக்காமை மற்றும் புரோஸ்டேட் வீக்கம் (Enlarged Prostate) போன்ற காரணங்களாலேயே இவ்வாறான கற்கள் உருவாகின்றன எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால், அலட்சியமாக வீட்டிலிருக்காமல் உடனடியாக மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
