உலகளவில் 1.2 பில்லியன் மக்கள் மனநல பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்: ஆய்வில் தகவல்
இது 1990ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 95.5% சதவீத அதிகரிப்பாகும்.
இந்த ஆய்வின்படி, பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகிய குறைபாடுகளே உலகளவில் மிக அதிகளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1990ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பதற்றம் தொடர்பான பாதிப்புகள் 158% சதவீதத்தாலும், மனச்சோர்வு பாதிப்புகள் 131% சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.
கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரித்த மனச்சோர்வு மற்றும் பதற்ற நிலையின் தாக்கம், பெருந்தொற்று முடிவடைந்த பின்னரும் 2023ஆம் ஆண்டு வரை குறையாமல் உயர்வாகவே காணப்பட்டதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது உலகளவில் மனிதர்களின் செயற்பாட்டுத் திறனைப் பாதிக்கும் முதன்மைக் காரணியாக மனநலக் குறைபாடுகள் மாறியுள்ளன.
இதில் பெண்களும், 15 முதல் 39 வயதுக்கு இடைப்பட்டவர்களுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, வரலாற்றில் முதன்முறையாக 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட இளம் பருவத்தினரிடையே இந்த மனநல பாதிப்புச் சுமை உச்சம் தொட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
204 நாடுகளை உள்ளடக்கி, வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தால் இந்த உலகளாவிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
