காசாவின் 70% நிலப்பரப்பை ஆக்கிரமிக்க இஸ்ரேல் இராணுவத்திற்கு நெதன்யாகு உத்தரவு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் நடைபெற்ற மாநாடொன்றில் பேசிய அவர், காசாவின் 60 வீதப் பகுதி தற்போது இஸ்ரேலின் வசம் உள்ளதாகவும், அடுத்த கட்டமாக இதனை 70 வீதமாக அதிகரிப்பதே தனது இலக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் இந்தத் தீவிர ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாக, காசாவில் உள்ள சுமார் 2 மில்லியன் பாலஸ்தீன மக்கள் மேலும் ஒரு சிறிய பகுதிக்குள் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2025 ஒக்டோபரில் அமெரிக்காவின் தலையீட்டுடன் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையின்படி, இஸ்ரேலிய படைகள் “மஞ்சள் கோடு” எல்லைக்குப் பின்வாங்கியதன் மூலம் காசாவின் 53 வீதப் பகுதியே இஸ்ரேல் வசம் இருந்தது.
இந்நிலையில், இஸ்ரேல் இந்த எல்லைக் கோட்டை தன்னிச்சையாக நகர்த்தி உடன்படிக்கையை மீறுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஆயுதங்களைத் திரட்டுவதாகக் கூறி, போர்நிறுத்தத்திற்குப் பின்னரும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் இதுவரை 850க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஹமாஸின் இராணுவப் பிரிவுத் தலைவர் மற்றும் அவருக்குப் பின் பதவியேற்ற புதிய தலைவர் ஆகியோரை இஸ்ரேல் அடுத்தடுத்து படுகொலை செய்துள்ளது.
மறுபுறம், ஹமாஸ் அமைப்பும் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்து வருகிறது. சர்வதேச பாதுகாப்புப் படை இன்னும் நிலைநிறுத்தப்படாத நிலையில், இஸ்ரேல் படிப்படியாக காசாவின் பெரும்பகுதியைத் தன்வசப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
