ஈரானில் நடைமுறையிலுள்ள இணைய முடக்கம் – 70% மக்கள் அதிருப்தி
ஈரானில் நடைமுறையிலுள்ள கடுமையான இணையக் கட்டுப்பாடுகள் குறித்து, அந்த நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தலைமையிலான ஜனாதிபதி செயலக மையம் விசேட ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வின் மூலம், ஈரானிய மக்களில் 70 சதவீதமானோர் தற்போதைய இணையக் கட்டுப்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தத் தகவலை ஈரானின் நிர்வாக விவகாரங்களுக்கான துணை ஜகாதிபதி மொஹமட் ஜாபர் கெம்பனாஹ் (Mohammad Jafar Ghaempanah) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானின் ‘மெஹ்ர்’ (Mehr) செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய நேர்காணலில், இணையத்தை முடக்குவது நாட்டின் நிலையான கொள்கையாக இருக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் “முழுமையான தகவல் தொடர்பு கட்டுப்பாடுகள் ஒருபோதும் சரியான முடிவுகளைத் தராது. தற்போதைய கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் ‘பில்டர் பிரேக்கர்’ (Filter breakers) மற்றும் விபிஎன் (VPN) போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இதன் விளைவாக, நாட்டின் விரோத சக்திகளும் முகவர்களும் இந்தத் தகவல் தொடர்பு இடைவெளியைச் சாதகமாகப் பயன்படுத்தி, குழப்பத்தை விளைவிப்பதற்கும் மக்களுக்குத் துரோகம் இழைப்பதற்கும் வழிவகுத்துள்ளது.”
ஈரானில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக நாடு தழுவிய ரீதியில் இணையச் சேவை முற்றாக முடக்கப்பட்டுள்ள பின்னணியில், அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்து இந்தத் தரவுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
