பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு
தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா (Quetta ) நகரில் இன்று (24) ரயில் தண்டவாளத்திற்கு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் மூன்று எல்லைப் படை வீரர்கள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வெடிவிபத்தில் பல பெண்களும் குழந்தைகளும் காயமடைந்தனர் என்றும், அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் பலுசிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிந்த் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் ஆயுதமற்ற பொதுமக்களைக் குறிவைத்ததாகவும், பொது இடங்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் தீவிரவாதக் குழுக்களின் விரக்தியின் அறிகுறி என்றும் அவர் விவரித்தார்.
வெடி விபத்தினை அடுத்து பாதுகாப்புப் படையினர் குறித்த பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர்.
அதேவேளையில் அதிகாரிகள் ஆதாரங்களைச் சேகரித்து, சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
