Main Menu

சுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தியின் சிலை திறந்து வைப்பு

சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று (சனிக்கிழமை) மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் வில்லினூவ் நகராட்சிக்கு உட்பட்ட பூங்காவிலேயே மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு விழாவில் பேசிய ஜனாதிபதி, ஜெனீவா ஆற்றங்கரையில் இந்த சிலையை அமைக்க அனுமதி அளித்து, அந்த இடத்துக்கு ‘காந்தி சதுக்கம்’ என்ற பெயரை சூட்டியுள்ள சுவிட்சர்லாந்து அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரோமைன் ரோலான்டின் அழைப்பை ஏற்று கடந்த 1931 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி வில்லினூவ் நகருக்கு முன்னர் வந்து சென்றதை நினைவுகூர்ந்த அவர், ஒருமைப்பாடு மற்றும் மனிதநேயத்தின் மீது மகாத்மா காந்தி மட்டற்ற நம்பிக்கை கொண்டிருந்தார் என குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு மகாத்மா காந்தி வகுத்துத்தந்த வாழ்முறைகள் நமக்கு உத்வேகமாக இருந்து நாம் ஒன்றிணைந்து உழைக்க காரணியாக அமையட்டும் எனவும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

பகிரவும்...