Main Menu

பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளுக்கு சுவிஸ்லாந்தில் தடை!

பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற முன்மொழிவை பெரும்பாலான சுவிஸ்லாந்து நாட்டவர்கள் வரவேற்றுள்ளனர்.

நேரடியாக இஸ்லாமிய மக்கள் அணியும் புர்காவை இது குறிக்கவில்லை என்றாலும் சில ஐரோப்பிய நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள ‘புர்கா தடை’யை சுவிஸ்லாந்திலும் நடைமுறைப் படுத்தும் நோக்கில் சுவிஸ்லாந்தில் வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டது.

சுமார் ஒரு ஆண்டுகாலம் நடந்த விவாதங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற நகர்வுக்கு 51.2 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிராக 48.8 சதவீத பேரும் வாக்களித்துள்ளனர்.

இதனால், பொது இடங்களில் புர்கா அணிவதை சட்ட விரோதம் என வகை செய்யும் வகையிலான சட்டத்தை சுவிஸ்லாந்து இயற்றும் எனத்தெரிகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிஸ்லாந்தில், பொது இடங்களில் முகக்கவசம் அணிந்தவாறு நடத்தப்படும் வன்முறைகளையும், தாக்குதல்களையும் தடுத்து நிறுத்த இச்சட்டம் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டம் இஸ்லாமியர்கள் அணியும் புர்காவை நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருந்தாலும்கூட அந்நாட்டிலுள்ள தீவிர வலதுசாரி அரசியல் தலைவர்கள் இதை புர்கா தடை சட்டம் என்றே அழைக்கின்றனர்.

சுவிஸ்லாந்து நாட்டின் கலாசாரத்தின்படி மக்கள் பொது இடங்களில் தங்கள் முகத்தைக் காட்ட வேண்டும், அதுவே நம் அடிப்படை உரிமை என்றும் இச்சட்டத்தை முன்மொழிந்த வால்டர் வோப்மேன் தெரிவித்தார். மேலும், முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணிவது தீவிர அடிப்படைவாத இஸ்லாத்தின் சின்னம் என்றும் இதற்கு சுவிஸ்லாந்தில் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

லூசெர்ன் பல்கலைக்கழகத்தின் (ஜேர்மன் மொழியில்) ஆராய்ச்சியின் படி, சுவிஸ்லாந்தில் யாரும் புர்கா அணியவில்லை, சுமார் 30 பெண்கள் மட்டுமே நிகாப் அணியிறார்கள். 8.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சுவிஸ்லாந்தின் மக்கள்தொகையில் சுமார் 5 சதவீத முஸ்லிம்கள், பெரும்பாலானவர்கள் துருக்கி, போஸ்னியா மற்றும் கொசோவோவிலிருந்து வந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஐரோப்பாவின் பிரான்ஸ் நாட்டில் முதல்முதலாக கடந்த புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது, அதன் பின்னர் டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளும் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...