Main Menu

இஸ்ரேலிய பிரதமரை பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்: 55பேர் கைது!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவியலிருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், அசாம்பாவிதத்தில் ஈடுபட்ட 55பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை, கொரோனா தொற்றுக்கு எதிரான அரசாங்கத்தின் மோசமான கையாளுதல் முறைகளை சுட்டிக்காட்டி மத்திய ஜெருசலேமில் ஆயிரக்கணக்கானோர் நேற்று (வெள்ளிக்கிழமை) போராட்டங்களை முன்னெடுத்தனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து மோதல்களும், வன்முறைச் சம்பவங்களும் வெடித்தமையினால் இஸ்ரேலிய பொலிஸார், போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீரங்கி தாக்குதல்களை பயன்படுத்தினர்.

இதன்போது, பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் 55பேரை பொலிஸார் கைதுசெய்தனர்.

இஸ்ரேலின் பிரதமராக ஐந்தாவது முறையாக பதவி வகிக்கும் நெதன்யாகுவின் ஆட்சியின் மீது ஊழல் புகார் கூறி கடந்த 6 மாதங்களாகவே இஸ்ரேலில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

70 வயதான நெதன்யாகு மீது மோசடி, நம்பிக்கையை மீறுதல் மற்றும் இலஞ்சம் பெற்றுக்கொள்வது போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் நண்பர்களிடமிருந்து ஆடம்பரமான பரிசுகளைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் நம்பிக்கையை குலைத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உயர் வகை மது மற்றும் சிகெரட்டுகளை பரிசாக வாங்கியது, தனக்கு சாதகமான செய்திகளை வெளியிட பத்திரிகை நிறுவனங்களை வலியுறுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் அவர் ஆளாகியுள்ளார்.

எனினும், நெதன்யாகு இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுப்பதுடன், இவை பக்கச் சார்புடைய சட்ட அமுலாக்க அமைப்பினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சூழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலில் இலஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் ஆகியவற்றுக்கு மூன்று ஆண்டுகள் வரையும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...