Main Menu

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்- ராணுவம் மோதல்: 24 மணிநேரத்தில் 76 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும்   ஆப்காகன் ராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் சிக்கி பொது மக்கள் 76 பேர் உயிரிழந்தனர்.

உருஸ்கான் மாகாணத்தில் தலிபான்களின் நிலைகளை குறிவைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவில் அரசபடைகள் வான்தாக்குதல் நடத்தியபோது, பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் குண்டுகள் வீழுந்து வெடித்தன.

இதில் பெண்கள் உட்பட பொது மக்கள்களில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் காந்தஹார் மாகாணத்தில் உள்ள காக்ரெஸ் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலிபான்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே அதே மாகாணத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியோரம் தலிபான்கள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கி, வெடித்து சிதறியதில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவ்வாறு அரச படைகளின் வான்தாக்குதலிலும், தலிபான்களின் தாக்குதல்களிலும் சிக்கி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சாதாரண பொது மக்கள் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெவ்வேறு சம்பவங்களில் அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தமைக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தலீபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசு படைகளும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் போராடி வருகின்றன.

அதேசமயம் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு இணைந்து தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகின்றன.

பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் அதே சமயம் தலிபான்களின் தாக்குதல்களும், ராணுவத்தின் பதிலடி தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. அரசு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையிலான இந்த மோதல்களில் சாதாரண பொது மக்களே அதிகம் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...