சுதந்திர நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை: ஈரான்
“பிறநாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவால் இனி திணிக்க முடியாது. சுதந்திரமான நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை.” என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரெசா தலாய் நிக் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவுக்கு ஈரான் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், ஈரான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரெசா தலாய் நிக் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பிறநாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவால் இனி திணிக்க முடியாது. சுதந்திரமான நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை. தனது சட்டவிரோத, பகுத்தறிவற்ற கோரிக்கைகளை கைவிட வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்கும்” என தெரிவித்தார்.
ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் அது நிச்சயமற்றதாக இருப்பதால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் 2.8% உயர்ந்து ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 109 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது. ஹார்முஸ் ஜலசந்தி பெரும்பாலும் கடக்க முடியாத நிலையில் உள்ளதால் அந்த பகுதியில் அசாதாரண சூழலே நிலவி வருவதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. உலகில் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் இந்த கடற் பாதை முடக்கப்பட்டுள்ளதால், பல நாடுகளில் எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எனவே, மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகள் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
