இந்தோனேசியாவில் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 84 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் ஜகார்த்தாவுக்கு வெளியே உள்ள பெகாசியில் திங்கட்கிழமை இரவு ஒரு பயணிகள் ரயிலும், ஒரு நீண்ட தூர ரயிலும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக இந்தோனேசிய அரசு ரயில்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பாபி ரசிடின் கூறினார்.
பெகாசியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தப் பிறகு, கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உதவும் வகையில் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் மேம்பாலம் கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளதாக இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கூறினார்.
மேலும், இந்த மோதல் குறித்து அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்றும், இந்த ரயில் பாதையின் பெரும் பகுதிகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் குழு (KNKT) இந்த விபத்து குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது.
