Main Menu

தேனி மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடம்- 7 இடங்களில் மையங்கள்!

தமிழ்நாடு, தேனி அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடம் அமைப்பதற்கான இடத்தைத் தெரிவுசெய்யும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடம் அமைக்க மத்திய ஆராய்ச்சிச் கழகம் அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து அதற்கான இடத்தைத் தெரிவுசெய்யும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3800 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவிலும் இந்நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இதனைத் தடுக்க மத்திய சுகாதாரத்துறை முழு வீச்சில் செயற்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் 51 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடம் அமைக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், சென்னை கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்திலும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் இரத்தப் பரிசோதனைக் கூடம் அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும் மதுரை, சேலம், திருவாரூர், விழுப்புரம், நெல்லை, கோவை, சென்னை ஆகிய 7 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இரத்த மாதிரிகள் சேகரிக்கும் மையங்கள் அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த 7 மையங்களில் சேகரிக்கப்படும் இரத்த மாதிரிகள் சென்னை மற்றும் தேனியில் அமைக்கப்படும் பரிசோதனைக் கூடங்களில் சோதனை செய்யப்படும்.

இதேவேளை, சென்னையில் இருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு விஜயம்செய்யும் அதிகாரிகள் இன்றும் நாளையும் அதற்கான இடத்தைத் தெரிவுசெய்து பரிசோதனைக் கூடம் அமையும் இடத்தை இறுதிசெய்வார்கள் என தேனி மருத்துவக் கல்லூரியின் முக்கிய அதிகாரி தெரிவித்தார்.

பகிரவும்...