Main Menu

கர்நாடகாவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்: அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு!

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகின்ற நிலையில் சட்டசபை அமர்வில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸின் தலைமை கொறடா கணேஷ் ஹுகேரி அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நிதி மற்றும் பிற விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) சட்டசபை அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அமர்வில் கலந்துகொள்ளுமாறு இராஜினாமா கடிதத்தினை சமர்ப்பித்த 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், அவ்வாறு சமூகமளிக்காதவர்கள் கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கணேஷ் ஹுகேரி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேர் இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்திருந்த நிலையில், முதலமைச்சர் குமாரசாமியின் ஆளும் கட்சி ஸ்திரமற்ற நிலையை எதிர்நோக்கியுள்ளது.

இதனால் ஆட்சியினைத் தக்கவைக்கத் தேவையான உறுப்பினர்களின் ஆதரவை, ஆளும் கட்சி இழந்து வருவதுடன், பா.ஜ.க.வின் பலம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இராஜினாமா கடிதத்தை சமர்பித்த சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவல் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் கூட்டணி ஆட்சிக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...