Main Menu

ஐ.எஸ்.அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு கடூழிய சிறைத் தண்டனை

கேரளாவில் ஐ.எஸ்.அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் அதிக அளவு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் தங்கள் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்காக இவர்களது ஆதரவாளர்கள் பல்வேறு நாடுகளிலும் இளைஞர்களை மூளை சலவை செய்து ஐ.எஸ்.அமைப்பில் சேர்த்து வருகிறார்கள். கேரளாவை சேர்ந்த பலரும் இவ்வாறு மூளை சலவை செய்யப்பட்டு ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக காசர்கோடு, கண்ணூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிக அளவு ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து உள்ளனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பான ஐ.என்.ஏ.அதிகாரிகள் கேரளாவில் விசாரணை நடத்தி குறித்த அமைப்பிற்கு ஆள் சேர்ப்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.

மேலும் கேரளாவிலிருந்து பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தவர்கள் பற்றியும் பட்டியல் தயாரித்து அவர்களை தேடி வருகிறார்கள். ஐ.என்.ஏ.அதிகாரிகள் விசாரணையில் கிடைத்த தகவல்படி இதுவரை 98க்கும் மேற்பட்ட கேரளாவை சேர்ந்தவர்கள் ஐ.எஸ். பயங்கவாத அமைப்பில் சேர்ந்துள்ள தகவல் கிடைத்துள்ளன.

இவர்கள் சிரியா, ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக போரில் ஈடுபட்டதில் 38 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். கேரளாவில் ஐ.என்.ஏ.அதிகாரிகள் இவ்விடயம் குறித்து இரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனூடாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் பலரும் தொடர்ந்து கைதாகி வருகிறார்கள்.

காசர்கோடு பகுதியை சேர்ந்த 15 இளைஞர்கள் கேரளாவை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தானுக்கு சென்று அங்கு ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தனர்.

இவ்விடயம் பற்றிய தகவல் கிடைத்ததும் ஐ.என்.ஏ.அதிகாரிகள் விசாரணை நடத்தி ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தில் கேரள இளைஞர்களை  இணைத்த யாஸ்மின் முகம்மது சாகித் என்ற பெண்ணை கைது செய்தனர்.

இவர் கேரளாவிலிருந்து டெல்லி சென்று அங்கிருந்து விமானம் ஊடாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அவர் மீதான வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் யாஸ்மின் முகம்மது சாகித்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து யாஸ்மின் முகம்மது சாகித் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்தது.

இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்புக்கு எதிராக ஐ.என்.ஏ.அதிகாரிகள் மற்றும் யாஸ்மின் முகம்மது சாகித் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள், யாஸ்மின் முகம்மது சாகித்துக்கு ஏற்கனவே என்.ஐ.ஏ.நீதிமன்றம் வழங்கிய 7 ஆண்டு சிறை தண்டனையை விதித்து தீர்ப்பு வழங்கியது.

பகிரவும்...