Main Menu

இத்தாலியில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: மக்கள் வெளி இடங்களுக்குச் செல்ல தடை

இத்தாலியில் மிக வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால், குறிப்பிட்ட சில மாகாணங்களில் வாழும் மக்கள் வெளியிடங்களுக்குச் செல்ல அரசு தடை விதித்துள்ளது.

வெனிஸ், மிலன் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வாழும் ஒரு கோடியே 50 லட்சம் மக்கள், எதிர்வரும் மாதம் ஏப்ரல் 3ஆம் திகதி தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு இத்தாலியில் மக்கள் எந்த முக்கியக் காரணமும் இன்றி வெளியேறக் கூடாது என்று அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மீறினால் குற்றமாகக் கருதப்படும் என்றும் அந்நாட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாதிப்பு தீவிரமான நிலையில் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள், இரவு விடுதிகள் உள்ளிட்டவற்றை ஏப்ரல் 3ஆம் திகதி வரை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், திரையரங்குகள், நாடக அரங்குகள், அருங்காட்சியகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் உயிரிழப்புகளும், நோய் தாக்கமும் அதிக அளவில் இருப்பது இத்தாலியில் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 266ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கோவிட்-19 தொற்றால் நேற்று மட்டும் புதிதாக 1,200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கை 5,883ஆக உயர்ந்துள்ளது.

பகிரவும்...