Main Menu

எதிர்கால உலகிற்கு ஏற்ற சந்ததியினரை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்

ஸ்மாட் வகுப்பறை – ஸ்மாட் பாடசாலை மற்றும் டெப் கணினி வசதிகளை வழங்கி, எதிர்கால உலகிற்கு ஏற்ற சந்ததியை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த பாடசாலைத் தவணையிலிருந்து கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு டெப் கணினி வழங்கப்படும். இவ்வாறான பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் தெற்காசியாவின் முதலாவது நாடு இலங்கையாகும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்கால உலகிற்கு ஏற்ற சந்ததியொன்றை உருவாக்க ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் கூறினார். திருகோணமலை மாவட்டத்தில் பல அபிவிருத்திச் செயற்திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளித்ததன் பின்னர் திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதமர் உரையாற்றுகையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு அங்கு நியமனம் வழங்கப்பட்டது. தற்போது கணினித் துறையில் 90 ஆயிரம் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், அந்த அனைத்து வெற்றிடங்களையும் நிரப்புவதற்கான பின்புலம் இந்தக் கல்விப் புரட்சியின் மூலம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அரசாங்கம் இனப்பிரச்;சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில், 22 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதியளித்திருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த நியமனங்களை வழங்கும் போது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

vijayakala

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையானோர் தொழில் இல்லாமல் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக பல்வேறு செயற்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பகிரவும்...