Main Menu

மில்லியன் கணக்கில் சொத்துக்கள்… கோடீஸ்வரரின் கடைசி ஆசை: சுவிஸ் பெண்மணியை தேடும் அதிகாரிகள்

ஆஸ்திரியா நாட்டு கோடீஸ்வரர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் தமக்கு முறையற்று பிறந்த மகள் மீது தனது மொத்த சொத்துக்களையும் எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அந்த கோடீஸ்வரர் மரணமடைந்த நிலையில், அவரது மொத்த சொத்துக்களுக்கு வாரீசான அந்தப் பெண்மணியை தேடி வியன்னா நகர அதிகாரிகள் பெர்ன் மண்டலத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஆஸ்திரியா நாட்டவரான Franz Etschmann வியன்னாவில் இருந்து கடந்த 1961 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் குடிபெயர்ந்துள்ளார்.

சுவிஸில் பெர்ன் மண்டலத்தில் குடியேறிய அவர், குடியிருந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 6 பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் சுவிஸ் யுவதியுடன் காதல்வயப்பட்டு, திருமணம் செய்து கொள்ளாமலையே ஒரு பெண் பிள்ளைக்கு தந்தையாகியுள்ளார்.

ஆனால் காலச் சூழல் காரணமாக 1964 ஆம் ஆண்டு அவர் மீண்டும் வியன்னாவுக்கே திரும்பியுள்ளார்.

அங்கே அவர் பூட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு, பெரும் செல்வந்தராகியுள்ளார். ஆஸ்திரியாவில் குடிபெயர்ந்த பின்னர் இருமுறை திருமணம் செய்து கொண்டவருக்கு கடைசிவரை பிள்ளைகள் ஏதும் பிறக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு Franz Etschmann வயது மூப்பின் காரணமாக மரணமடைந்துள்ளார்.

ஆனால் தமது சொத்துக்களை சுவிட்சர்லாந்தில் தமது காதலிக்கு பிறந்த மகள் பெயரில் அவர் எழுதி வைத்துள்ளார்.

அந்த மகளுக்கு தற்போது 55 முதல் 57 வயதிருக்கும் என கூறும் வியன்னா அதிகாரிகள், தற்போது Franz Etschmann-ன் இறுதி ஆசையை நிறைவேற்ற பெர்ன் மண்டலத்திற்கு வந்துள்ளனர்.

ஒருவார காலம் பெர்ன் மண்டலத்தில் தங்கியிருந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும், Franz Etschmann-ன் மகளை கண்டுபிடித்து அவரிடம் சொத்துக்களை ஒப்படை வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

ஆஸ்திரிய கோடீஸ்வரரின் உண்மையான வாரிசுக்கு அவரது தந்தையின் பெயர் குறிப்பிட்டுள்ள பிறப்பு சான்றிதழ் இருப்பதாக வியன்னா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...