Main Menu

புதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியது அமெரிக்கா..!

விமானப்படை, கடற்படை வரிசையில் அமெரிக்கா புதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியுள்ளது. 

அமெரிக்காவில் ராணுவம், மெரைன் கார்ப்ஸ், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை என 5 படைப்பிரிவுகள் உள்ளன. 6வது படைப் பிரிவாக, விண்வெளிப்படையை அமெரிக்கா புதிதாக உருவாக்கியுள்ளது.

இதற்காக, 738 பில்லியன் டாலர்கள் தொகையை ஒதுக்குவதற்கான சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். புதிய படைப் பிரிவை உருவாக்கியுள்ளதன் மூலம் மிகப்பெரிய சாதனை எட்டப்பட்டுள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.

விண்வெளியில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாப்பது விண்வெளிப் படையின் முக்கிய நோக்கமாகும். விண்வெளியானது போர்க்களங்களில் ஒன்றாக மாறியிருப்பதாகவும், அதில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது விண்வெளிப் படைப் பிரிவின் நோக்கம் என்று அமெரிக்க பாதுகாப்பத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக 16 ஆயிரம் பேரை மட்டுமே கொண்ட அமெரிக்காவின் மிகச்சிறிய படைப் பிரிவாக இது அமைகிறது. பிற படைகளைப் போல வீரர்களின் எண்ணிக்கையை வைத்து விண்வெளிப் படையை எடைபோடக் கூடாது என்றும், தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் திறன்களே முக்கியம் என்றும் விமானப்படை செயலர் பார்பரா பேரட் (Barbara Barrett) கூறியுள்ளார்.

அமெரிக்க விண்வெளிப்படை தொடங்கப்பட்டுள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்றும், இது அமெரிக்க அதிபர் டிரம்பின் தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்த வெற்றி என்றும் பார்பரா பேரட் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...