Main Menu

அமெரிக்க வரலாற்றில் முதல் முறை கருப்பின பெண் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு

மாயா ஏஞ்சலோ நினைவாக அவரது உருவம் பொறித்த ¼ டாலர் நாணயத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் கருப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ. கருப்பினத்தை சேர்ந்த இவர் கவிஞர், கலைஞர், சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார்.

இவர் கடந்த 1969-ம் ஆண்டு “கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்பது எனக்குத் தெரியும்” என்கிற பெயரில் தனது சுயசரிதையை வெளியிட்டார். அந்த புத்தகத்தில் அவர் சிறுவயதில் இருந்து தன்மீது காட்டப்பட்ட இனவெறி, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவை குறித்தும் அவற்றில் இருந்து மீண்டு வந்து எழுத்துலகில் சாதனை பெண்ணாக உருவெடுத்தது குறித்தும் விரிவாக எழுதியிருந்தார்.

இந்த புத்தகத்தின் மூலம் மாயா ஏஞ்சலோ சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற நபராக மாறினார். இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய மக்கள் விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. இவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது 86 வயதில் காலமானார். இந்த நிலையில் மாயா ஏஞ்சலோ நினைவாக அவரது உருவம் பொறித்த ¼ டாலர் நாணயத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் கருப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் முதல் பெண் நிதித்துறை செயலாளரான ஜெனட் லெயனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் “ஒவ்வொரு முறையும் நமது நாணயத்தை மறுவடிவமைப்பு செய்யும் போது, நமது நாட்டை பற்றி நாம் எதை மதிக்கிறோம், ஒரு சமூகமாக நாம் எப்படி முன்னேறி வருகிறோம் என்பதை பற்றி ஏதாவது சொல்ல வாய்ப்பு உள்ளது” என கூறினார்.

பகிரவும்...